காலிமுகத்திடல் தாக்குதல்: தென்னக்கோன், ஜோன்ஸ்டன் உட்பட 37 பேருக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 3 இற்கு ஒத்திவைப்பு!

கொழும்பு, காலிமுகத்திடலில் 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 37 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்காக எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் பசான் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான அதிகாரிகள் தெரிவிக்கையில்,

“கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அது தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதற்கமைய, சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனச் சட்டமா அதிபருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரச சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பாகச் சந்தேகநபர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.” – என்று குறிப்பிட்டனர்.

இந்த வழக்கின் 26ஆவது சந்தேகநபரான மஹிந்த கஹந்தகம இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை.

அதற்கமைய, மேற்படி சந்தேகநபரை அடுத்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிவான் கட்டளையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.