மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு! – மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விடயத்தில் அவரின் நடத்தைக்குச் சிறிநாத் எம்.பி. கடும் கண்டனம்.
மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் நடந்துகொண்ட விதம் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் வலியுறுத்தியுள்ளார்.
இனவாதிகளின் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையிலேயே அரச அதிபர் செயற்பட்டு வருகின்றார் என்றும், இது தொடர்பில் ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் முறைப்பாடு அளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனை என்பது காலம் காலமாக எமது பண்ணையாளர்களால் மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இடமாகும். ஜனாதிபதி கலந்துகொண்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், நீதிமன்றத் தீர்ப்புகளிலும் பண்ணையாளர்களுக்குச் சாதகமான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.
ஆனால், தற்போதைய சூழலில் குழப்பத்தை ஏற்படுத்தவும் பண்ணையாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கவும் அத்துமீறிய குடியேற்றவாசிகள் இனவாத சக்திகளால் தூண்டப்பட்டு விவசாய நடவடிக்கைகளில் இறக்கப்படுகின்றனர். இதனைப் பாரதூரமான விடயமாகக் கருதி நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
கடந்த 2ஆம் திகதி அறவழியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, கோரிக்கை மகஜரைப் பெற்று ஜனாதிபதியிடம் கையளிக்க வேண்டிய மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் வெளியே வராமல் தவிர்க்க முனைந்தமை கண்டிக்கத்தக்கது.
மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நாங்களும் அந்தக் கோரிக்கையை அரச அதிபரிடம் கையளிக்க முயன்றபோதும், எங்களைச் சந்திக்க முடியாதவாறு பொலிஸாரைக் கொண்டு தடைகளை ஏற்படுத்தியிருந்தார்.
மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்காமல் மாவட்டத்தில் பிரச்சினைகளைத் தீவிரப்படுத்த முயல்வது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அரச அதிபர் இனவாத சக்திகள் தூண்டும் பிரச்சினையை மேலும் வலுப்படுத்துகின்றார் என்றே தோன்றுகின்றது.
மக்களின் உணர்வுகளை ஜனாதிபதியிடம் கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பிலுள்ள அரச அதிபர் எதேச்சதிகாரமாக நடந்துகொள்வது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் உடனடி விசாரணை நடத்தப்படுவதோடு, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைச் சிக்கலுக்கு அரசு விரைவான தீர்வை முன்வைக்க வேண்டும்.” – என்றார்.
