வடக்கில் பக்கத்து அலுவலகத்துக்கு தபாலில் கோவை அனுப்பும் அவலம்! – அரச சேவையின் தாமதங்கள் குறித்து ஆளுநர் கவலை.

மனிதவளத்தைப் பயன்படுத்தி நேரடியாக அரச சேவைகள் வழங்கப்பட்ட காலத்தில் அதிகாரிகளிடம் காணப்பட்ட மனிதநேய அணுகுமுறையும் சேவைகளை விரைந்து வழங்கும் பண்பும், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கணினிமயமான சேவைகள் நடைமுறைக்கு வந்துள்ள தற்போதைய சூழலில் குறைந்துள்ளமை கவலைக்குரியது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

அலுவலர்களுக்குக் காலத்துக்குக் காலம் பயிற்சிகள் வழங்கப்படுவது அவர்களின் திறன்களை மேம்படுத்தி, மக்களுக்கான சேவைகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் வழங்குவதற்கே என்று குறிப்பிட்ட ஆளுநர், அந்த இலக்கை அடைவதற்கு இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகின் ஏற்பாட்டில், பல்வேறு பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு மாகாண சபையின் சில முக்கிய திணைக்களங்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுக்கொன்று மிக அருகில் அமைந்துள்ளன. இருப்பினும், ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்துக்கு நேரடியாகக் கோவையைக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, வழமைபோன்று தபாலில் அனுப்பிவிட்டு அதற்காகக் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. இத்தகைய நடைமுறைகள் சேவைகளில் தேவையற்ற தாமதங்களை ஏற்படுத்துகின்றன.

அலுவலர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவர்களுக்குரிய பதவி உயர்வுகள் உள்ளிட்ட நிர்வாக விடயங்களையும் உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். அவர்களது கோவைகளை உரிய நேரத்தில் அனுப்பிவைப்பதிலும் தாமதங்கள் ஏற்படக்கூடாது. மக்களுக்கு அதிகாரிகள் எவ்வாறு சேவையாற்றுகின்றார்களோ, அதேபோன்று அதிகாரிகளின் தேவைகளையும் நிர்வாகம் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.

அலுவலர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதன் நோக்கம், மாறிவரும் உலகின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களைத் தயார்ப்படுத்துவதாகும். அந்தப் பயிற்சிகளின் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவையும் திறன்களையும் தமது அன்றாடப் பணிகளில் பயன்படுத்தி, மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும். அரச சேவையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது அலுவலர்களின் பொறுப்பாகும்.

தற்போதைய அரச அலுவலகங்களில் அலுவலர்களும் திணைக்களத் தலைவர்களும் புதிய சிந்தனைகளைச் செயற்படுத்துவதற்கும், புத்தாக்க முயற்சிகளை முன்னெடுப்பதற்கும், தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கும் தயக்கம் காட்டுகின்றனர். வேலை செய்யாமல் இருப்பதால் பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பான்மை மாற வேண்டும்.

ஒருவர் செயற்படும்போது, அதிலும் சரியான முறையில் பணியாற்றும்போது விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடலாம். சமூக ஊடகங்களிலும் விமர்சனங்கள் எழலாம். அவற்றைக் கண்டு அஞ்சிச் செயற்படாமல் இருப்பதைவிட, உரிய பொறுப்புணர்வுடன் பணியாற்றுவது அவசியம். அவ்வாறு விமர்சனங்களை எதிர்கொள்வது சில சந்தர்ப்பங்களில் ஒருவர் சரியான முறையில் செயற்படுவதற்கான அடையாளமாகவும் அமையலாம்.

பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதுடன் பயிற்சி முடிந்துவிடக் கூடாது. அந்தப் பயிற்சிகளின் ஊடாகப் பெற்றுக்கொண்ட அறிவும் திறனும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் தெளிவாக வெளிப்பட வேண்டும். அதுவே இத்தகைய பயிற்சிகளின் உண்மையான பெறுபேறாக அமையும்.” – என்றார்.

இந்த நிகழ்வில், பெறுகை நடைமுறையும் ஒப்பந்த நிர்வாகமும், பொதுநிதி முகாமைத்துவம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய சான்றிதழ் கற்கைநெறிகளையும், பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறியையும் பூர்த்தி செய்த 193 அலுவலர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணியும் பயிற்சியும்), முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகின் பணிப்பாளர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.