கஸ்ஸப்ப தேரர் நாளை வரை திருமலை சிறையில் மறியலில் – நீதிமன்ற அவமதிப்பு, மேல் நீதிமன்றப் பிணை நிபந்தனை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைப்பு.
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரை நாளை செவ்வாய்க்கிழமை வரை திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும், நாளை மீளவும் அவரை மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுடீன் இன்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த கஸ்ஸப்ப தேரர், நேற்றிரவு திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தேரர் சில தினங்களுக்கு முன்னர் இந்த மன்றையும், நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் ஊடகங்கள் முன்பாகக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்றும், அதன் மூலம் அவர் நீதிமன்ற அவமதிப்பை மேற்கொண்டுள்ளார் என்றும் தீர்மானம் வழங்குமாறும் கோரி திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தினர் இடையீட்டு மனுவொன்றை மன்றில் முன்வைத்துக் கோரிக்கை விடுத்தனர்.

திருகோணமலை கடற்கரை சட்டவிரோத புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில், தேரருக்குத் திருகோணமலை மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள பிணை விடுவிப்பு நிபந்தனைகள் இரண்டை அவர் மீறியுள்ளார் என்றும், எனவே அவருக்கு வழங்கப்பட்ட பிணை அனுமதி இரத்துச் செய்யப்பட்டு இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, கஸ்ஸப்ப தேரர் தமது தரப்பில் நீதிபதியின் அனுமதியுடன் மன்றுக்குத் தாமே நேரடியாகக் கருத்துகளை முன்வைத்தார்.
சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸார் மற்றும் தேரர் ஆகிய அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் செவிமடுத்த திருகோணமலை நீதிவான், முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாளை தீர்மானம் ஒன்றை வழங்குவதாக அறிவித்து வழக்கை நாளை வரை ஒத்திவைத்தார்.
………………..
