தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தவணைக்காக முன்னிலையாவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே, அவர் மீது இனந்தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

புங்குடுதீவில் இடம்பெற்ற சட்டவிரோத மாடு கடத்தல் சம்பவம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பஸ் உரிமையாளர் அகிலன் கொலை தொடர்பில் கொலையாளிகளை அடையாளம் காட்டியமை சார்ந்த வழக்கு, இன்று வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

இந்த வழக்கில் முன்னிலையாவதற்காகக் கருணாகரன் குணாளன் ஊர்காவற்றுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, வழிமறித்த மூவர் கொண்ட கும்பல் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதன்போது அவரது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதுடன், மூன்று விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.