இனவாதம், மதவாதம் தூண்டுவோர் எவரும் தப்பிக்கவே முடியாது!

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இனவாதத்தைத் தூண்டுவோர் மற்றும் மதவாதக் கருத்துக்களைப் பரப்புவோர் எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நாட்டில் சகவாழ்வுக்குக் குந்தகம் விளைவிக்க முற்படும் அத்தகைய நபர்கள் அனைவரும் பாரபட்சமின்றிச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தற்போதைய அரசின் கீழ் நாட்டின் நீதித்துறை எவ்வாறான அரசியல் தலையீடுகளுமின்றி முற்றிலும் சுயாதீனமாக இயங்கி வருகின்றது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், குற்றமிழைப்பவர்களுக்கு எதிராகச் சட்டம் தனது கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் தெரிவித்தார்.

கடந்த காலங்களைப் போன்று அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாசாரத்துக்குத் தற்போதைய ஆட்சியில் இடமில்லை என்றும் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் கூறினார்.

பௌத்த மதம் மிகவும் தூய்மையானதும் அமைதியைப் போதிப்பதுமான ஒரு உன்னத தத்துவம் என்று குறிப்பிட்ட கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, அத்தகைய புனிதமான மதத்தைத் தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்துவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

சமயத்தைப் பின்னணியாக வைத்து மக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் பிளவுகளையும் உருவாக்கி அரசியல் நடத்த முற்படுவோர், இறுதியில் சிறைச்சாலையிலேயே தங்களது காலத்தைக் கழிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

நாடு பொருளாதார மற்றும் சமூக ரீதியாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில், மத மற்றும் இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது அரசின் பிரதான பொறுப்பாகும் என்று குறிப்பிட்ட அமைச்சர், அமைதியைச் சீர்குலைக்கும் எத்தகைய சக்திகளுக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.