கோரத் தீ விபத்தில் நால்வர் உயிரிழப்பு! – ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
கொழும்பு – கடுவெல நகரில் அமைந்துள்ள மின்சாதனப் பொருள்கள் விற்பனை நிலையமொன்றில் இன்று வியாழக்கிழமை காலை ஏற்பட்ட கோரத் தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 35 வயதுடைய தந்தை, 30 வயதுடைய தாய் மற்றும் இரண்டு, ஐந்து வயதுடைய அவர்களது இரு பெண் குழந்தைகளும் அடங்குகின்றனர்.
இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ் மாடியில் மின்சாதனப் பொருள்கள் விற்பனை நிலையம் இயங்கி வந்த நிலையில், மேல் மாடியில் மேற்படி குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகக் கோட்டை தீயணைப்புப் பிரிவிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அனுப்பப்பட்டிருந்தன. தீயணைப்புப் படையினரும் பிரதேச மக்களும் இணைந்து எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்த நால்வரையும் மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டுசென்ற போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த வர்த்தக நிலையக் கட்டடத்தில் அவசர வெளியேறும் கதவு வசதி இருக்கவில்லை எனவும், இதன் காரணமாகவே தீ பரவியபோது மேல் மாடியிலிருந்தவர்களால் வெளியேற முடியாமல் போனார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கடுவெல பொலிஸாரும் தடயவியல் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
