ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மேலும் இரு வருடங்கள் நீடிப்பு – அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வந்துவிடும் எனப் பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இந்தச் சலுகைக் காலம் 2026 டிசம்பர் முதல் 2028 டிசம்பர் வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதால் வீணாக அச்சமடையத் தேவையில்லை எனவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிறைவு குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“அபிவிருத்தியடைந்து வரும் நாடான இலங்கைக்கு ஐரோப்பியச் சந்தைக்கு வரிகளற்ற முறையில் அல்லது குறைந்த வரியில் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்காகவே இந்த விசேட வரிச்சலுகை வழங்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் 7 வருடங்கள் இந்தச் சலுகை இலங்கைக்கு மறுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான பணிகளை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வர்த்தக அமைச்சு ஆகியவற்றின் தலைமையில் 9 அமைச்சர்களைக் கொண்ட விசேட அமைச்சரவைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைக் குழுவின் வழிகாட்டலில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவொன்றும் அமைக்கப்பட்டு, 2027ஆம் ஆண்டு இறுதியடைவதற்குள் இந்தச் சலுகைக்கான புதிய விண்ணப்பச் செயல்முறைகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை ஆண்டுதோறும் சுமார் 3 ஆயிரம் வகையான பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2 ஆயிரத்து 400 மில்லியன் முதல் 3 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஏற்றுமதி வருவாயை ஈட்டுவதுடன், ஜி.எஸ்.பி. பிளஸ் மூலம் 150 மில்லியன் முதல் 200 மில்லியன் டொலர்கள் வரை கூடுதல் வரி நிவாரணத்தைப் பெறுகின்றது.

சாதாரண ஜி.எஸ்.பி. சலுகையில் 7.5 சதவீதம் வரை மட்டுமே வரிக்குறைப்பு கிடைக்கும் நிலையில், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையின் கீழ் 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், தொழிலாளர் உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளைப் பேணுதல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுகள் இடம்பெற்று வருவதுடன், அரசு அதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

மொத்த தேசிய உற்பத்தியின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டில் இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் (2025, 2026, 2027) நடுத்தர வருமான நிலையிலேயே நீடித்தால், ஜி.எஸ்.பி. பிளஸ் விதிகளின்படி இந்தச் சலுகை எதிர்காலத்தில் கைநழுவிப் போகும் வாய்ப்புள்ளது.

இதனை எதிர்கொள்ளும் வகையில், புதிய உலகளாவிய சந்தைகளைக் கண்டறிந்து 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயை 35 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த அரசு பாரிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. தற்போது இலங்கையின் ஏற்றுமதியில் 18 சதவீதம் ஐரோப்பியச் சந்தைக்கும், 14 சதவீதம் பிரித்தானியாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவதுடன், இதில் 60 சதவீதத்தை ஆடைக் கைத்தொழில் ஏற்றுமதியே வகிக்கின்றது.

இலங்கை என்றென்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக மட்டுமே தங்கியிருக்க முடியாது என்பதால், ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான உலகளாவிய போட்டித் திறனை வழங்கி, நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவது அரசின் முதன்மை இலக்காகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.