திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் விளக்கம்!
திருப்பரங்குன்றத்தில், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டதோடு, மீறினால் இந்த முறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என மதுரை உயர்நீதிமன்றமும் எச்சரித்தது.
ஆனால், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலிலே நேற்று தீபம் ஏற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனையடுத்து, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், கல்தூணில் தீபம் ஏற்றாதது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் 17 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில், நவம்பர் 20 முதல் 22 வரை வருவாய், அறநிலையத் துறை, காவல்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவு விளக்கப்பட்டு. தேவஸ்தானம் அங்கீகரித்த குழு மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், மாலை 6:00 முதல் 6:30 மணிக்குள் அங்கீகரிக்கப்பட்ட எந்தக் குழுவும் வரவில்லை, நேர நீட்டிப்பும் கேட்கவில்லை.
எனவே, தேவஸ்தானம் குழு அமைத்து அங்கீகாரம் தராததாலும், வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற அறங்காவலர் குழு தீர்மானித்ததாலும் மலைத் தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை.
உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாததற்கு ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா வருத்தம் தெரிவித்தார்.
