நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் இறந்ததாக அறிவிப்பு!

நேபாள பெருவெள்ளம் ஏற்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிக்கும் பணியை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

திபெத் – நேபாளம் எல்லையில் கடந்த ஆக.26-இல் பெரும் பனிப்பாறை சரிவால் போடே கோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது.

இந்த வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போன நிலையில், 1,300-க்கும் அதிகமானோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இன்னும், 5,000-க்கும் அதிகமானோர் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், இந்தியாவிலிருந்து நேபாளத்துக்குச் சுற்றுலா சென்ற 213 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில், பெருவெள்ளம் ஏற்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், காணாமல் போனவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு, உயிரிழந்தவர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டின் தேசிய பேரிடரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்த பட்டியலில் 213 இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. அவர்களின் கடவுச்சீட்டு எண், ஆதார் அட்டை எண் போன்ற அடையாள அட்டை எண்களும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த பட்டியலில் உள்ள விவரங்களில் ஏதேனும் தகவல் சேர்த்தல், நீக்கல் அல்லது திருத்தங்கள் இருப்பின், டிச. 2-க்கு முன்னதாக உறவினர்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

[email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையோ அல்லது +9779851316807 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் இறப்புச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் நேபாள அரசு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.