கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்துள்ளார்.

பொகவந்தலாவைப் பகுதியில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொகவந்தலாவை – தெரேசியா தோட்டத்தின், மோரா பிரிவைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே, இவ்வாறு பயணம் செய்துள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த நபர், பொகலந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகளினால், நேற்றிரவு ஹம்பாந்தோட்டை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு ஹெட்டியாவத்தை வீதியில் பணிபுரியும் குறித்த நபர், கடந்த 18 ஆம் திகதி தனது ஊருக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, அவர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த 24 ஆம் திகதி PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு PCR பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், குறித்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், குறித்த நபர் நேற்றைய தினம் முச்சக்கர வண்டியில் நோர்வூட், ஹட்டன் மற்றும் புளியாவத்தை ஆகிய பகுதிகளுக்கு பயணித்துள்ளார்.

இதனையடுத்து, அவர் மீண்டும் வீட்டுக்கு வரழைக்கப்பட்டு, ஹம்பாந்தோட்டை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த நபர் நடமாடிய மேலும் பல இடங்களை கண்டறிந்து கொள்ளும் நோக்கில், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.