ஹிட்லரின் வழியிலே பயணிக்கும் கோட்டா.முஜிபுர் ரஹ்மான்

ஹிட்லரின் வழியிலே பயணிக்கும் கோட்டா

‘மொட்டு’ கட்சியின் கிளையாக மாற்றப்பட்டுள்ளது
மனித உரிமைகள் ஆணைக்குழு என்கிறார் முஜிபுர்

“ஹிட்லரின் வழியிலேயே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான அரசு பயணிக்கின்றது.”

– இவ்வாறு  ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பது மிக முக்கிய நிறுவனமாகும். பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கும் பணியை அது முன்னெடுக்க வேண்டும். பணம் செலவளித்து நீதிமன்றம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்துதான் தமது குறைகளைக் கூறி தீர்வைப் பெறுவார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மனித உரிமை விவகாரம் தொடர்பில் தெரிந்தவர்களே நியமிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த அரசு ஜகத் பாலசூரிய என்பவரை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளராக நியமித்துள்ளது.

யார் இந்த ஜகத் பாலசூரிய? மஹிந்த ராஜபக்ச காலத்தில் அமைச்சராக இருந்தவர். ஆளுநர் பதவி வகித்தவர். ‘மொட்டு’ கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர். அவரின் மனைவி ஆளுநராகப் பதவி வகிக்கின்றார். மகன் தாரக பாலசூரிய அரசியல் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகிக்கின்றார்.

‘மொட்டு’ கட்சி உறுப்பினர் எவ்வாறு மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்க முடியும்? இது வெட்கம் கெட்ட செயலாகும். இந்தநிலையில், அரசுக்கு எதிராக எவ்வாறு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்? அவ்வாறு முன்வைத்தாலும் எவ்வாறு நீதி கிடைக்கும்? முழு உலகமும் சிரிக்கின்றது. இவரின் நியமனத்தை எவ்வாறு நியாயப்படுத்துவது? ஆக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பது ‘மொட்டு’ கட்சியின் கிளையாக மாற்றப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.