தொற்றாளர் எண்ணிக்கையை மறைக்க இடமளிக்கமாட்டோம்! சுகாதார அமைச்சர் திட்டவட்டம்.

தொற்றாளர் எண்ணிக்கையை
மறைக்க இடமளிக்கமாட்டோம்!
சுகாதார அமைச்சர் திட்டவட்டம்.

“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மறைப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.”

–  இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பான குழப்பம் மற்றும் அதனை அறிவிப்பது தொடர்பான குழப்பம் என்பன தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒவ்வொரு வைத்தியசாலை நிர்வாகமும் தத்தமது வைத்தியசாலையில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அந்தந்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்கு அறிவிக்க வேண்டும். குறித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தத்தமது மாகாணங்களில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும். சுகாதார அமைச்சு, அனைத்து மாகாணங்களிலும் நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கொரோனாத் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்துக்கும் அரச தகவல் திணைக்கள அலுவலகத்துக்கும் அறிவிக்கும். அதனடிப்படையில் ஒவ்வொரு இரவும் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். இதுதான் நடைமுறை. இந்த நடைமுறை வடக்கு மாகாணத்தில் மீறப்படுகின்றதா என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.