2021 மார்ச் மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல். அரசு அறிவிப்பு.

2021 மார்ச் மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தல்! அரசு அறிவிப்பு.

2021 மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு எதிர்ப்பார்க்கின்றது எனவும், தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக  ஆராய்வதற்காக கட்சி தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறைமை குறித்து நீண்டகாலமாக கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. தேர்தல் முறைமை மாற்றம் என்ற போர்வையில் கடந்த ஆட்சியின்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்பட்ட அச்சத்தாலேயே எல்லை நிர்ணயம், பெண் பிரதிநிதித்துவம் உட்பட பல விடயங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி  திட்டமிட்ட அடிப்படையில் அது பிற்போடப்பட்டது.

இந்தநிலையில் இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்படி விரைவில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. கட்சி தலைவர்களுடன் நடைபெறும் கலந்துரையாடலின் பின்னர் எட்டப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மீண்டும் அமைச்சரவை பத்திரமொன்றை முன்வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முன்வைக்கப்படும் யோசனை குறித்து அமைச்சரவையும் ஆராய்ந்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்.

தேர்தல் முறைமை பற்றி ஆராயவேண்டும் என்பதனால் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி முடிவெடுப்பதே சிறப்பானதாக இருக்கும். நல்லாட்சி என்பதே தேர்தலை பிற்போடவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தியது. ஆனால் மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதற்கே நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.

அந்தவகையில் மார்ச் மாதத்துக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அதனை அடிப்படையாகக்கொண்டே பேச்சுகள் இடம்பெற்றன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.