கொரோனாத் தொற்று அபாயத்தால் வடக்கில் சகல சந்தைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு

கொரோனாத் தொற்று அபாயத்தால்

வடக்கில் சகல சந்தைகளும்
மறு அறிவித்தல் வரை பூட்டு

– நடமாடும் விற்பனைக்கு அனுமதி

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று நிலைமையைக் கருத்தில்கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுப் பரவலையடுத்து பொதுச்சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களின் ஆபத்தைக் கருத்தில்கொண்டு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளை மூடுமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் வீதியோரம் அல்லது நடமாடும் விற்பனையை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் அறிவுறுத்தபட்டுள்ளது.

இது தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பில்,

“வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கியுள்ள பரிந்துரைகளின் பிரகாரம் கொரோனா நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வடக்கு மாகாணத்தில் அனைத்துப் பொதுச் சந்தைகளையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை மூடப்படவேண்டும்.

வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு வியாபாரத்தைப் பரவலாக்கி வீதியோரங்களில் அல்லது தமது வதிவிடங்களில் அல்லது நடமாடும் விற்பனையில் ஈடுபட அனுமதியளிக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் பலர் வியாபாரம் செய்தலைத் தடை செய்யவேண்டும்.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலையை விரைவில் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.