வவுனியா நகரப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்.

வவுனியா நகரப் பாடசாலைகளின்
கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்.
மாணவர் வரவு குறைவு.

வவுனியா நகரில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மாணவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளன. இருப்பினும் மீள ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் மாணவர் வரவு குறைவாகவே காணப்பட்டது.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, காமினி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தற்காலிகமாக மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தது.

வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நகரப் பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் வவுனியா, கற்குழி, முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவருக்குத் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நகரப் பாடசாலைகள் நான்கும் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், குறித்த மாணவியுடன் தொடர்புடையவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தநிலையில், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் வவுனியா நகரப் பாடசாலைகள் நான்கும் திறந்து கல்விச் செயற்பாடுகளை வழமை போன்று முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் பாடசாலைகளில் மாணவர் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.