யாழ். மாநகர சபையில் ஈசனைக் காப்பாற்ற போராடிய ஆனோல்ட்! – ஈ.பி.டி.பி. – கூட்டமைப்பு தர்க்கம்

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவர் தலைமையில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ அமர்வில், பிரதி மேயர் து.ஈசனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமிடியஸ் முயற்சித்தார்.

இதன்போது முன்னாள் மேயர் இ.ஆனோல்ட், அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டதோடு சபையைத் தவறாக வழிநடத்த வேண்டாம் என்று புதிய மேயர் மணிவண்ணனிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து சபை அமர்வை ஒத்திவைப்பதாக மேயர் அறிவித்தார்.

ஈ.பி.டி.பியின் உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, “மேயரே! சபை அமர்வு நடைபெறுவதால் பிரதி மேயரைத் தெரிவு செய்வது பொருத்தம் என்று கருதுகின்றேன்” என்று தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ப.தர்சானந்த், “மேயர் பிரதி மேயர் தெரிவை நடத்த வேண்டியவர் உள்ளூராட்சி ஆணையாளர். தாங்கள் அல்லர். தாங்கள் அறிவிக்கலாம். பிரதி மேயரைத் தெரிவு செய்யும் உரிமை சபைக்கு இல்லை என நான் தங்களிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று கூறினார்.

கூட்டமைப்பு உறுப்பினர் ந.லோகதயாளன், “சபையில் பிரதி மேயருக்கான வெற்றிடம் ஏற்பட்டால் மட்டுமே தெரிவை மேற்கொள்ளலாம். தற்போது அந்த நிலை ஏற்படவில்லை. இந்த விடயத்தை சட்ட ரீதியாக அணுகுங்கள்” – என்றார்.

ஈ.பி.டி.பியின் உறுப்பினர் மு.றெமிடியஸ். “மேயராகத் தெரிவாகியிருக்கும் உங்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். பிரதி மேயர் என்பவர் தங்களின் அபிமானம் – ஆதரவைப் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது சபையின் ஆதரவைப் பெற்றவராக இருக்க வேண்டும். அதுதான் முறை. அந்தவகையில் இந்த இடத்தில் தற்போது இருக்கின்ற பிரதி மேயருக்கு எதிராக அவரின் பதவி வறிதாகும் என்ற அடிப்படையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நான் இந்த இடத்தில் கொண்டு வருகின்றேன்” – என்றார்.

கூட்டமைப்பின் முன்னாள் மேயர் இ.ஆனோல்ட், “மேயரே! இந்தக் கூட்டம் மிகக் கண்ணியமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. மாநகர சபை மேயர் வெற்றிடத்துக்கு ஏற்பட்ட போட்டி நடைபெற்று தாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தச் சபையின் கண்ணியம் தவறாது செயற்பட வேண்டும். இது பிரதி மேயர் தெரிவுக்கான நேரமல்ல. பிரதி மேயர் தொடர்பில் உரிய தரப்பினருடன் ஆராய்ந்து சட்டமூலங்களின் பிரகாரம், அதனைப் புரிந்து மேற்கொண்டு செயற்பட நடவடிக்கை எடுப்பதே சாலப் பொருத்தம் என்பது எனது கருத்து. ஏனெனில் இது மேயர் தெரிவுக்கான கூட்டம். பிரதி மேயர் தொடர்பில் எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் இந்தச் சபை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை எனக்குத் தெரிந்தளவில் வலியுறுத்த விரும்புகின்றேன். சபையைத் தவறாக வழிநடத்தாது நீங்கள் தெளிவாக ஆராய்ந்து முறைப்படி செய்ய முடிந்தால் அது சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து” – என்றார்.

மேயர் வி.மணிவண்ணன், “பிரதி மேயர் தெரிவு தொடர்பில் பிறிதொரு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” – என்று கூறி அமர்வை ஒத்திவைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.