வீர வசனங்கள் முழங்கி சர்வதேச விசாரணைக்குள் நாட்டைச் சிக்க வைக்காதீர்!:சஜித் அணி எச்சரிக்கை

வீர வசனங்கள் முழங்கி

சர்வதேச விசாரணைக்குள்
நாட்டைச் சிக்க வைக்காதீர்!

கோட்டா அரசுக்கு சஜித் அணி எச்சரிக்கை

“வீர வசனங்கள் பேசி சர்வதேச விசாரணைப் பொறிக்குள் இலங்கையைச் சிக்கவைக்க வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

‘இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்’ என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் அடுத்தடுத்துக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் வினவியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதால் அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை உதாசீனம் செய்யாத வகையில் அரசு நடக்க வேண்டும்.

தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விலகியமை மிகவும் தவறான நடவடிக்கையாகும்.

கால அவகாசம் கேட்டாவது தீர்மானங்களின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். அதைவிடுத்து தீர்மானங்களை உதாசீனம் செய்தமையால் மேலும் பல நெருக்குவாரங்களை இலங்கை சந்திக்க வேண்டி வந்துள்ளது.

அதன் ஓர் கட்டமாக இம்முறை புதிய பிரேரணை ஒன்றை இலங்கை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அந்தப் பிரேரணை மிகவும் வலுமிக்கதாக இருக்கும் என்று தமிழ்த் தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், போர்க்குற்ற விவகாரத்தை அரசு தூக்கிப் பிடிக்க ஆரம்பித்துள்ளது.

போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு சாதுரியமாக ஈடுபட வேண்டும். அதைவிடுத்து பகிரங்கமாக ஐ.நாவுடன் அரசு மோதினால் ஆபத்து பேராபத்தாக மாறக்கூடும். அது எமது நாட்டை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்திவிடும்.

எனவே, வீர வசனங்கள் பேசி சர்வதேச விசாரணைப் பொறிக்குள் இலங்கையைச் சிக்கவைக்க வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.