வகுப்புத் தடை விதிக்கப்பட்ட யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை நீக்கம்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மீது விதிக்கப்பட்டருந்த உள்நுழைவுத் தடை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக்கொள்ளப்படுகின்றது எனத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார் என்று சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் கலாநிதி எஸ். ராஜ் உமேஸ் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டு மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்வதற்காகவும், மாணவர்களின் நலன் கருதியும் துணைவேந்தருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

துணைவேந்தரின் இந்த முடிவு பற்றி உண்ணாவிரதத்தில் இன்று ஈடுபட்ட மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் கலாநிதி எஸ். ராஜ் உமேஸ், மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் எஸ்.ஐங்கரன், பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் எஸ். கண்ணதாசன் மற்றும் ஒழுக்காற்று அதிகாரி பி. ஹஜந்தன் ஆகியோர் நேரில் சென்று துணைவேந்தரின் முடிவை மாணவர்களுக்கு அறிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறும் மாணவர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த முடிவை ஏற்றுக்கொள்வதற்கு மாணவர்கள் பின் நின்றனர். எனினும், துணைவேந்தரின் இந்த நடைமுறை முரண்பாடுகளுக்குத் தீர்வாக – சிறந்த திறவுகோலாக அமையும் என்றும்,  தொடர்ந்தும் பிரச்சினைகளை வளர்த்துக்கொள்ளாமல் நடைமுறைகளைப் பின்பற்ற மாணவர்கள் முன்வர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.