தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேச்சுக்கு அழைப்பு விடுத்தது அரசு!

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேச்சுக்கு அழைப்பு விடுத்தது அரசு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொலைபேசியூடாகத் தன்னிடம் தெரிவித்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கொரோனா என்ற கொடிய வைரஸ் நோய் தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் நிமிர்த்தம் அவர்கள் அனைவரையும் உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களைப் பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று சபையில் தெரிவித்திருந்தார். தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பிணையாளர்களாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர் என்ற தகவலையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவைத் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்ட வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நேரில் பேசுவோம் என்று கூறியுள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தற்போது கொழும்பில் நிற்பதால் இன்று அல்லது நாளை இந்தப் பேச்சை ஒழுங்குசெய்யலாம் என்று தினேஷிடம் மாவை இதன்போது பதிலளித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளை அரசின் சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன பேச்சுக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.