வடக்கில் இன்று 12 பேருக்குக் கொரோனாத் தொற்று!

வடக்கு மாகாணத்தில் இன்று 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 2 பேர் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும், 7 பேர் பூநகரியைச் சேர்ந்தவர்கள் எனவும், 2 பேர் மருதங்கேணியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் எனவும் அவர் கூறினார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் இன்று இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவர்கள் 12 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பூநகரியைச் சேர்ந்த 11 பேர் வெளிநாடு செல்ல கொழும்பிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். அவர்களிடம் அந்த விடுதியில் வைத்து மாதிரிகள் பெறப்பட்டன. இதனால் அவர்கள் அங்கிருந்து தப்பித்து பூநகரிக்குத் திரும்பி வந்துள்ளனர். இவ்வாறு இவர்கள் தப்பி வந்தமை தொடர்பில் கொழும்பிலிருந்து வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது. அத்தோடு மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது தொடர்பிலும் கொழும்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுள்ள மூவரையும் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள் ஏனைய 8 பேரையும் சுயதனிமைப்படுத்தியிருந்தனர்.

இந்த 8 பேரின் மாதிரிகள் இன்று யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மருதங்கேணி சுகாதார பிரிவில் கொழும்பு சென்று திரும்பிய இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய சங்கானையைச் சேர்ந்த ஒருவருக்கும், உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனது சொந்த ஊரான மாத்தளைக்குச் சென்று வந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.