வடக்கு – கிழக்கு இணைந்த தனிப் பிராந்தியம்: கூட்டமைப்பினரின் யோசனை ஜெய்சங்கரிடம் – நேரில் கையளித்தார் சம்பந்தன்

வடக்கு – கிழக்கு இணைந்த தனிப் பிராந்தியம் உள்ளிட்ட பல பரிந்துரைகளை உள்ளடக்கி புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் சமர்ப்பித்திருந்த யோசனைத் திட்ட வரைபு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த வரைபைக் கையளித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது, புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதன்போதே தமது யோசனைத் திட்டத்தை ஜெய்சங்கரிடம் சம்பந்தன் கையளித்தார்.

21 பக்கங்களைக் கொண்ட இந்த யோசனைத் திட்ட வரைபில், “புதிய அரசமைப்பில் மத்திய மற்றும் பிராந்தியங்களின் ஐக்கியத்தைக் கொண்டதாக அரசு முறைமை அமைய வேண்டும். அதில் ஒரு பிராந்தியமாக தமிழ் பேசும் மக்களின் பிரதான வாழிடமான வடக்கு – கிழக்கு இருத்தல் வேண்டும். ஒரு மக்கள் கூட்டத்துக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படுமானால் அவர்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் வெளிப்புற சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை நினைவுபடுத்துகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.