‘மக்களை மையமாகக் கொண்ட மற்றும் வெளிப்படையான’ நாட்டிற்கு திருப்பி அனுப்பும் செயன்முறையில் வெளிநாட்டு அமைச்சு சாதனையை நிலைநாட்டியுள்ளது

பொதுக் களத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவல்களுக்கு பதிலளிக்கும் முகமாக, இலங்கையர்களுக்கு எந்தவிதமான நிதிச்சுமையும் இன்றி நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு வெளிநாட்டு அமைச்சு தொடர்ந்தும் வசதிகளை வழங்கும் என வெளியுறவுச் செயலாளர் தெரிவித்தார். நாட்டிற்கு மீளத் திரும்பி வருபவர்களை நாட்டை வந்தடைந்தவுடன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் அனைத்து ஏற்பாட்டியல் ஆதரவுகளையும் வழங்கி, அரசாங்க வசதிகளில் கட்டணமின்றி தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்பும் விமானங்களை ஏற்பாடு செய்யும் வகையில் தூதரகங்களின் வகிபாகம் கட்டாயமாக வரையறுக்கப்பட்டுள்ளதாக செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெளிவுபடுத்தினார்.

தூதரகங்கள் மற்றும் பணிமனைகளில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பட்டியலிலிருந்து நாட்டிற்கு மீளத் திரும்பி வருபவர்கள் தெரிவு செய்யப்படுவதுடன், அவர்களின் பாதிப்பு நிலைகளைப் பொறுத்து ‘முதலில் வருபவர்களுக்கு முதல் சேவை என்ற அடிப்படையில்’ திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். வெளிநாடுகளில் பணிபுரியும் சமூகத்தைப் பாதுகாப்பாக திரும்பப் பெற்றுக்கொள்வது தொடர்பான விமானங்கள் கிடைத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள விமான நிலைய அதிகாரிகளின் அனுமதி தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் அவற்றின் பிரதிநிதிகளும் எமது தூதரகங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். முக்கியமாக தனிமைப்படுத்தல் மையங்களுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதிகளால் வழங்கப்படும் குறிப்பிட்ட காலாந்தர மதிப்பீடு மற்றும் உள்ளீடுகளின் அடிப்படையில் இராணுவ செயலணியினாலும், சுகாதார வழிகாட்டுதல்களை செயற்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சினாலும் ஒரு நாளைக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகின்றது.

உள்நாட்டு தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ வசதிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ள சூழ்நிலைகளில், கட்டண அடிப்படையில் நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்புவதானது, அத்தகைய வசதிகளை கொள்வனவு செய்யக்கூடியதொரு விருப்பத் தெரிவாக திரும்பி வருபவர்களுக்கு அமையும்.

கட்டண அடிப்படையிலான தனிமைப்படுத்தல், பரிசோதனை மற்றும் ஏனைய ஏற்பாட்டியல் வசதிகளை விரும்பும் இலங்கைச் சமூகக் குழுக்களின் வேண்டுகோளின் பேரில் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான பட்டய விமானங்கள் இலங்கைத் தூதரகங்களினுடாக அங்கீகரிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சரக்கு விமானங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வணிக விமானங்களும் திருப்பி அனுப்பும் செயற்பாட்டிற்காக அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இது தனிமைப்படுத்தல் மற்றும் ஏனைய தேவைகளுக்கு கட்டணம் செலுத்தக்கூடிய, கோவிட் செயலணியின் அண்மைய உத்தரவுக்கு அமைய ஒரு விமானத்திற்கு அதிகபட்சம் 75 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் சிறிய விமானப் பயணிகளுக்கு வழங்கப்படும் மூன்றாவது வகை வசதியாக அமைகின்றது.

விமான டிக்கெட்டுகள், பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் பயணிகளை கையாளுவதற்கு அந்தந்த விமான நிலையங்களின் பொது விற்பனை முகவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த வசதிகளுக்கான விஷேடமான கோரிக்கைகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்கள் தவிர, பயணத் தேவைகள் தொடர்பான எந்தவொரு கட்டணத்தையும் கையாளுவதற்கான அதிகாரம் இராஜதந்திரத் தூதரகங்களுக்கு வழங்கப்படவில்லை.

தொற்றுநோய் நிலைமையானது திரவ ரீதியானதாகவும், கணிக்க முடியாததாகவும் இருப்பதால், வழக்கமான மீள் மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதுடன், அதன் அடிப்படையில் திருப்பி அனுப்பும் செயன்முறை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகின்றது.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஜனவரி 08

Leave A Reply

Your email address will not be published.