வவுனியாவை முடங்குவதா? இல்லையா? நாளை அவசர கூட்டம்!

வவுனியா மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 51 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமையால் மாவட்டத்தை முடக்க வேண்டுமா என்பது தொடர்பில் நாளை (12) அவசர கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் வர்த்தகர்கள் மத்தியில் பரவும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இன்றுடன் 112 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையிலேயே மேற்படி அவசர கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நாளை காலை 8 மணியளவில் நடைபெறவுள்ளது.

வவுனியா மாவட்ட செயலர் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு பிரதேச செயலர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், சுகாதாரத்துறையினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் எனச் சகல தரப்பினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் 27 பேருக்கும், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் 24 பேருக்கும் என வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 51பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வவுனியா மாவட்டத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்கவும், சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மாவட்டத்தை முடக்குவது தொடர்பில் நாளைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.