தாதியர்கள், பொலிஸார் உட்பட மன்னாரில் இன்று மட்டும் 18 பேருக்குக் கொரோனா

மன்னார் மாவட்டத்தில் இன்று மாத்திரம் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும், 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கொரோனாத் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தனர் என்ற அடிப்படையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலைப் பரிசோதனைக் கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலை மருத்துவ விடுதியில் கொரோனாத் தொற்றாளர்கள் இருவர் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த விடுதியில் பணியாற்றிய மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளிகள் எனப் பலர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியமை கண்டறிப்பட்டது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் அடிப்படையில் தாதிய உத்தியோகத்தர்கள் இருவரும் சுகாதார ஊழியர்கள் இருவரும் என நால்வர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் நால்வருக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது.

இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.