கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து.

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் அஸ்ட்ராஜென்கா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மகராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள சீரம் நிறுவன வளாகத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம், 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு இதுவரை 10,000 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நிறுவனத்திலுள்ள மஞ்சரி வளாகத்தில் இன்று மதியம் 2.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்திலிருந்து தீயானது மளமளவென பரவி நான்காவது, ஐந்தாவது தளம் வரை நீண்டதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த வளாகத்தில் இருந்து 3 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

10 தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டன. தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனால் கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பில் எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளும், தடுப்பூசி தயாரிக்கப்படும் வளாகமும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

சீரம் நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரி அதார் பூனவல்லே, தீ விபத்து தொடர்பாக கவலைகளை வெளிப்படுத்தியவர்களுக்கும், பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மஞ்சரி பகுதியில் நடந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. கட்டிடத்தில் சில தளங்கள் மட்டும் சேதமடைந்துவிட்டன என்று அவர் விவரித்தார்.

Leave A Reply

Your email address will not be published.