தோட்ட தனி வீட்டு திட்டங்களுக்காக, இந்த ஆட்சியில் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை : தமுகூ தலைவர் மனோ கணேசன்

இலங்கை, இந்திய அரசுகளின் உதவிகளை போராடி, கேட்டு, ஒப்பந்தம் செய்து, பெற்று, மலைநாட்டு தோட்டங்களில் தனி வீடுகள் கட்டி, அந்த வீட்டு குடியிருப்புகளை மலையகத்தில் தமிழ் பெயர்களில் புதிய மலையக தமிழ் கிராமங்களாக  அடையாளப்படுத்தும் மலையக வரலாற்றின் எழுச்சி  பயணத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி நான்கே வருடங்களில் படிபடியாக ஆரம்பித்து முன்னெடுத்தது. நாம் விட்ட இடத்திலிருந்து, எமது பணியை தொடர வேண்டிய இந்த அரசாங்கம், தோட்ட தனி வீட்டு திட்டங்களுக்காக, கடந்த ஒரு வருடம், இரண்டு மாத காலத்தில்  ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை.

No photo description available.

வெறும் வாய் சவடால்களும், வெற்று அறிக்கைகளும், கனவு திட்ட அறிவிப்புகளும், எவருக்கும் விளங்காத அமைச்சரவை முடிவுகளும் என சும்மா காலத்தை இந்த அரசாங்க கும்பல் ஓட்டுகிறது. இதுதான் மலைநாட்டில் இன்றைய கசப்பான உண்மை. மனசாட்சி உள்ள எவருக்கும் இது விளங்க வேண்டும் என கொழும்பு மாவட்ட எம்பியும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி தலைவர் மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

மலையக தோட்ட தொழிலாளர்களுக்காக,  இலங்கை, இந்திய அரசுகளின் தனி வீட்டு திட்டங்களை, தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்து வந்தது. நாம் 2015ல் ஆட்சியை பொறுப்பேற்ற போது, யார் அஸ்திவாரம் போடுவது, யார் சீமெந்து வாங்குவது, யார் வீட்டை கட்டுவது, யார் வர்ணம் பூசுவது என்ற இழுபறிகள் காரணமாகவும், சொந்த நிலம் இருந்தால்தான் உதவி திட்டம் அமுலாகும் என்ற இந்திய அரசின் நிலைப்பாடு காரணமாகவும், இவற்றை அரசுக்கு உள்ளே எடுத்து பேசி, தீர்வு காண ஆளில்லாத காரணத்தாலும்,  இந்திய வீட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

சொந்த நிலம் தொடர்பில் அமைச்சரவை அனுமதியை போராடி பெற்றதன் மூலம் இந்த திட்டம் தேசிய அங்கீகாரத்தை பெற்று, புதிய மலைநாட்டு கிராமங்கள் அமைச்சுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக, இந்திய தனி வீட்டு உதவி திட்டம் கோலாகலமாக ஆரம்பமானது. இதற்காக “புதிய மலைநாட்டு கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு”  என்ற பெயரில் தனி அமைச்சையே நாம் உருவாக்கினோம்.

அதையடுத்து, எமது அழைப்பை ஏற்று இந்திய பிரதமர்,  மலையகத்துக்கு வருகை தந்த போது, கூட்டணியின் கோரிக்கையின்படி, மேலும் பத்தாயிரம் தனி வீடுகள் கட்டப்படுவதற்கான அறிவித்தல் பிரதமர் நரேந்திர மோடியினால் அறிவிக்கப்பட்டது.

கணிசமான தனி வீடுகள் கட்டப்பட்டன. இன்னமும் கணிசமான தனி வீடுகள் கட்டப்பட உள்ளன. தனி வீடுகள், மலைநாட்டில் தமிழ் பெயர்களில் கிராமங்கள் என்ற நீண்ட வரலாற்று பயணத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆரம்பித்து வைத்தது.

இவையனைத்தும் ஆக, நான்கே ஆண்டுகளில் நடைபெற்றவை. இவற்றை தவிர கூட்டணியின் சாதனை பட்டியலில் இன்னமும் நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றை நான் பிறகு கூறுகிறேன்.

2019ல் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய ஆட்சியில், கடந்த ஒரு வருடம், இரண்டு மாத காலத்தில், மலைநாட்டில் வீடு கட்ட ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை. இதுதான் மலைநாட்டில் இன்றைய கசப்பான உண்மை. மனசாட்சி உள்ள எவருக்கும் இது விளங்க வேண்டும்.

வெறும் வாய் சவடால்களும், வெற்று அறிக்கைகளும், கனவு திட்ட அறிவிப்புகளும், எவருக்கும் விளங்காத அமைச்சரவை முடிவுகளும் என சும்மா காலத்தை இந்த அரசாங்க கும்பல் ஓட்டுகிறது.

Leave A Reply

Your email address will not be published.