இந்திய சீரம் மையம் ஜூன் மாதத்துக்குள் அடுத்த தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு விடுவதாக அறிவிப்பு

இந்தியாவில் மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். 2021, ஜூன் மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென நம்புகிறேன்

நோவாவாக்ஸ் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து மற்றொரு கோவிட் -19 தடுப்பு மருந்தின் மருத்துவ அளவு பரிசோதனையைத் தொடங்க விண்ணப்பித்துள்ளதாகவும், ஜூன் 2021 க்குள் கோவாவாக்ஸ் தடுப்பு மருந்து வெகுஜனப் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என இந்திய சீரம் மையத்தின் (சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா சனிக்கிழமை தெரிவித்தார்.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் COVID-19க்கு எதிரான தடுப்பூசியின் செய்லதிறன் 89.3 சதவீதம் என கண்டறியப்பட்டது எனவும், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பதில் பயனுள்ளதாக உள்ளது எனவும் நோவாவாக்ஸ் நிறுவனம் நேற்று தெரிவித்த நிலையில், ஆதார் பூனவல்லாவின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்ட அவர், ” கொரோனா தடுப்பு மருந்துக்காக இந்திய சீரம் மையம் ஒப்பந்தம் செய்துக் கொண்ட நோவாவாக்ஸ் நிறுவனம் தனது செயல்திறன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்க விண்ணப்பித்துள்ளோம். 2021, ஜூன் மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென நம்புகிறேன்! ” எனத் தெரிவித்தார்.

அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை சீரம் இந்திய மையம் இந்தியாவில் தயாரித்தது. இந்த மாத தொடக்கத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர காலத்துக்கு கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .

ஜனவரி 16-ஆம் தேதி, தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள சுகாதார அலுவலர்களுக்கு முதலில் இந்தத் தடுப்பூசி போடப்பட்டது. அவர்களுடன் சேர்த்து தூய்மைப் பணியாளர்கள், இதர முன்கள போராளிகள், காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், பேரழிவு மேலாண்மை தன்னார்வலர்கள், மக்கள் நிர்வாகத்தில் உள்ள பாதுகாப்புப் படை வீரர்கள், நோய்த் தடுப்பு மற்றும் கண்காணிப்பில் தொடர்புடைய வருவாய் அலுவலர்களுக்கும் முதலாவது கட்டத்தில் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

இதற்கிடையே, இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.7 லட்சத்திற்கும் குறைவாக (1,69,824) பதிவாகியுள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.58 சதவீதம் மட்டுமே ஆகும். இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது (96.98%). இது உலகளவில் அதிகமான சதவீதத்தில் ஒன்றாகும். நாட்டில் தற்போதுவரை 1.04 கோடிக்கும் அதிகமானோர் (1,04,09,160) குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14,808 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.