ஞாயிற்றுக்கிழமை சசிகலா டிஸ்சார்ஜ்

பெங்களூர் அரசு மருத்துவமனையில் இருந்து வி.கே சசிகலா நாளை (ஜனவரி- 31) டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” இன்றுடன் சசிகலா நடராஜன் பத்து நாட்கள் சிகிச்சையை முடித்துள்ளார். நோய்த் தொற்று அறிகுறியற்ற அடிப்படையில் உள்ளார். அனுமதிக்கப்பட்ட மூன்று நாட்களிலிருந்து போதுமான ஆக்ஸிஜன் அளவுடன் காணப்படுகிறார்.

மருத்துவ நெறிமுறையின்படி, அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படலாம்

நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்ப சசிகலா தயாரான நிலையில் உள்ளார் என அவரை கண்காணித்த மருத்துவ குழு முடிவெடுத்துள்ளது. மேலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையுடன் நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.

சசிகலா கடந்த 27ம் தேதியன்று, சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், கொரோனா பெருந்தொற்று உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், சசிகலா தமிழகம் எப்போது திரும்புவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொதுவாக, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் 14 நாட்களுக்குள் அது எப்போது வேண்டுமானாலும் தீவிரம் அடையலாம் என மருத்துவ நெறிமுறைகள் தெரிவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.