இவரெல்லாம் தமிழ்நாட்டு முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமாக இருக்கிறது. நாடே வெட்கித் தலைகுனிகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வீரவநல்லூரில் திமுக தோ்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் அம்பாசமுத்திரம், ராதாபுரம், நான்குனேரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

பின்னர், பேசிய மு.க.ஸ்டாலின்;- கூடங்குளம் போராட்டத்தின்போது, எங்களது வேலைவாய்ப்பை, வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம் என்று வேதனையோடு சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 8856 மேல் வழக்கு போட்டிருக்கிறார்கள். அதுவும் சாதாரண வழக்கல்ல, தேசத்துரோக வழக்கு போட்டார்கள். ஜெயலலிதாவின் இந்த சர்வாதிகாரத்தை பார்த்து நாட்டில் இருக்கும் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். எப்படி இவ்வாறு நடந்து கொள்ள முடிகிறது என்று அதிர்ந்து போனார்கள். ஆனால் அது நமக்கு புதிதல்ல. வழக்கு போடுவதாக இருந்தாலும் சரி, சாலைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் இவர்களெல்லாம் வீட்டுக்கு அனுப்பியது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பல வழக்குகளை எல்லாம் போட்டார்கள்.

ஜெயலலிதா ஆட்சி இருந்தபோது இவ்வாறு நடந்திருக்கிறது. இந்தியாவில் தேசத்துரோக வழக்கை சாதாரண மக்கள் மீது போட்டு தொல்லை செய்ததில் இப்போது இருக்கும் முதலமைச்சர் முதல் இடத்தைப் பெறுகிறார். உங்களைப் போலத் தான் ஆசிரியர்கள் மீதும், ஜல்லிக்கட்டு போராளிகள் மீதும் ஆயிரக்கணக்கில் வழக்குகளைப் போட்டு கொடுமைப்படுத்தினார்கள்.

இப்போது தேர்தல் வருகிறது. அதனால் போடப்பட்டிருக்கும் வழக்குகளை எல்லாம் திரும்பப் பெறுகிறோம் என்று ஒரு கண்துடைப்பு நாடகத்தை இப்போது பழனிசாமி அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார். அது உண்மையில் நடக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். நாம் ஆட்சிக்கு வந்து அந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். முதலமைச்சர் சட்டமன்றத்தில் அடிக்கடி, “நீங்கள் பொய்யான, செய்ய முடியாத காரியத்தை சொல்லி தேர்தலில் வெற்றி பெற்று வந்துவிட்டீர்கள். மக்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றிவிட்டீர்கள்’ என்று சொல்லுவார். நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றினோம் என்றால் நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றுகிறீர்களா?

இப்போது 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. அந்த 3 வேளாண் சட்டங்கள் காரணமாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் இருக்கும் விவசாயிகள் எல்லாம் விவசாய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி உடனே இந்த அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டது. அதை எதிர்த்து இப்போது இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள். ஆனால் இப்போது தேர்தல் வரும் காரணத்தினால், நாம் ஏற்கனவே அறிவித்த காரணத்தினால் இவ்வாறு அறிவித்திருக்கிறார். இதை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், தங்கள் மீது எந்தப் பழியும் குற்றச் சாட்டும் ஏற்படாமல் செயல்பட வேண்டும். அப்படி குற்றச்சாட்டு வருமானால், அதனை எதிர்கொள்ளும் துணிச்சல் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் நம்மை மதிப்பார்கள் அப்படித்தான் நான் செயல்பட்டேன். இனியும் செயல்படுவேன். ஆனால் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிற பழனிசாமிக்கு அப்படி ஏதாவது துணிச்சல் உண்டா என்றால் இல்லை. அவர் பொதுப்பணித்துறையை வைத்திருக்கிறார். அதன் மூலமாக அறிவிக்கப்படும் டெண்டர்களை தனது சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் தருகிறார். கேட்டால், அவர்கள் டெண்டர் போட்டது எனக்குத் தெரியாது என்கிறார்.

எனது உறவினர்கள் தொழில் செய்யக் கூடாதா என்று கேட்கிறார். எனக்கு தமிழ்நாடு முழுவதும் உறவினர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார். உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதே என்று கேட்டால், யார் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று நிருபர்களையே வெட்கமில்லாமல் திருப்பி கேட்கிறார் பழனிசாமி. இவரெல்லாம் தமிழ்நாட்டு முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமாக இருக்கிறது. நாடே வெட்கித் தலைகுனிகிறது.

பழனிசாமி மீதான புகாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. இதனைக் கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐக்கு ஒப்படைத்தது. யோக்கியர் பழனிசாமி என்ன செய்தார்? டெல்லிக்கு போய், உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கினார். அவர் தடை வாங்காவிட்டால், இப்போது பதவியிலும் இருந்திருக்க மாட்டார். வெளியில் இருப்பாரா என்பதே சந்தேகம் தான். ஒரு ஸ்டே வாங்கி வைத்துக் கொண்டு ஸ்டேட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார். ஸ்டேட்  முதலமைச்சர் அல்ல அவர். ஸ்டே  முதலமைச்சர்!

பச்சைத் துண்டு பழனிசாமி அல்ல. பச்சைத் துரோக பழனிசாமி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மண்புழுவாக மாறியதால் முதலமைச்சர் ஆனவர். கலைஞரைப் பற்றி விமர்சிக்கிறார். மண்புழுபோல ஊர்ந்து பதவியைப் பெற்றது உண்மையா இல்லாயா? அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். மிகத் தேர்ந்த அடிமை என்று காட்டிக் கொண்டதால் பதவியைப் பெற்றவர்.

யாருடைய காலில் ஊர்ந்து போய் பதவியைப் பெற்றாரோ அவரது காலையே வாரியவர். இன்னும் இரண்டு நாட்களில் என்னென்ன செய்திகள் வரப்போகிறது பாருங்கள். ஊர்வலம் என்கிறார்கள், தடை என்கிறார்கள். நினைவிடத்திற்குப் பூட்டுப் போட்டுவிட்டார்கள். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை வேடிக்கை பார்ப்போம். இப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகத்தை சசிகலாவுக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் செய்தவர், செய்து கொண்டு இருப்பவர் தான் பழனிசாமி. இந்த பச்சைத் துரோக பழனிசாமி கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.