யார் உறவை வெட்டி வாழ்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தின் வாடையை கூட நுகர முடியாது.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அது ஒட்டி வாழுகின்ற உறவுகளை காரணங்கள் இன்றி வெட்டி வாழ்கின்ற நிலைதான்.

உறவுகளின் மேம்பாடுகள் சரியாக புரியப்படாமல் போனதால் தான் கூட்டுக் குடும்ப தத்துவங்கள் சிதைந்து போயின. முதியோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்து விட்டன. உறவின் உன்னதங்கள் புரியப்படாமல் மனித வாழ்க்கை உருண்டு கொண்டிருக்கின்றது.

மாற்று மதத்தவர்களிடம் மாமன் மச்சான் உறவு கொண்டாடிய கிராமிய பண்புகள் முகங்கள் திருப்பி மாற்றுப் பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கின்றன. இந்த மன மாச்சரியங்கள் மனிதகுலம் முன்னேறுவதற்கு தடைக்கற்களாக மட்டுமல்லாமல், பகை உணர்ச்சிகளை கொழுந்து விட்டு எரியச் செய்யும் கிரியா ஊக்கிகளாய் கூட செயல்படுகின்றன.

அல்லாஹ் தன் அருள்மறையில் “அவர்கள் (நல்லடியார்கள்) எத்தகையோரென்றால், அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்” (திருக்குர்ஆன் 13:21) என்று நல்லடியார்களின் குணாதிசயங்களை படம்பிடித்துக் காட்டுகின்றான்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த தொப்புள்கொடி உறவுகளில், திருமண பந்தங்களால் இடையில் வந்து ஒட்டிக்கொண்ட உறவுகளில், நட்பால் மலர்ந்த உறவுகளில், நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் ஆணித்தரமாக விளக்கி கூறியுள்ளது.

‘யார் உறவை வெட்டி வாழ்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தின் வாடையை கூட நுகர முடியாது. மூன்று நாட்களுக்கு மேல் ஒருவருடன் பேசாமல் இருப்பதே மகா பெரிய பாவம்’ என்று மிக கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

பிரச்சினையற்ற வாழ்க்கை எந்த மனிதனுக்கும் அமைவதில்லை என்பது இயற்கையின் நியதி. அந்த பிரச்சினைகளில் பெரும்பகுதி உறவுகளால் ஏற்படுகிறது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் அதனை அலசி ஆராய்ந்தால் அதன் காரணம் மிக அற்பமாக இருக்கும். புரிந்து கொள்வது வேறு, புரிந்து கொள்ள மறுப்பது வேறு. இந்த இரண்டு நிலைகளின் இடையே விளைவது தான் உறவுகளில் விரிசல்கள்.

பெற்றோர்களே, பிள்ளைகளை அரவணைத்துச் செல்லுங்கள். பிள்ளைகளே, பெற்றோர்களை மதித்துப் பாருங்கள். உறவுகளின் உன்னதங்களை நினைத்துப் பாருங்கள், வேற்றுமை விலகி மனம் லேசாவதை உணர்வீர்கள். உடைந்த பாத்திரம் வேண்டுமென்றால் ஒட்டாமல் போகலாம், ஆனால் எந்த நிலையிலும் மீண்டும் மீண்டும் உறவுகள் மட்டும் ஒட்டிக்கொள்ளும்.

அல்லாஹ் கூறுகிறான், ‘உறவுகளை எந்த நிலையிலும் சேர்ந்து வாழ்கின்றவரே என்னுடைய நல்லடியார்’. அண்ணல் எம்பெருமானார் அவர்களும் தன் வாழ்வில் பல கட்டங்களில் இதை உறுதியாக வலியுறுத்தியுள்ளார்கள்.

“இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்த தன் அடியார்களுக்கு இதைப் பற்றிதான் அல்லாஹ் நற்செய்தி சொல்கிறான். (நபியே! இவர்களிடம்) கூறிவிடும்: ‘நான் இந்தப் பணிக்காக உங்களிடமிருந்து எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், உறவினர்கள் மீது அன்பு காட்டுவதைக் கண்டிப்பாக நான் விரும்புகின்றேன். ஒருவர் ஏதேனும் நன்மை செய்வாராகில் நாம் அவருக்காக அந்நன்மையுடன் இன்னும் பல நன்மைகளை அதிகமாக்கிக் கொடுப்போம். திண்ணமாக, அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவனாகவும் மதிப்பவனாகவும் இருக்கின்றான்” (திருக்குர்ஆன் 42:23) என்று கூறி அல்லாஹ் நபிகள் மூலம் நமக்கு உறவுகளின் நேசத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கின்றான்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருப்பது மனித உறவில் இயல்பு. இதை ஏற்றுக்கொண்டு அவர்களையும் அரவணைத்து, அவர்கள் மனம் கோணாமல் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமைகளை, கவுரவங்களை, கண்ணியங்களை கொடுக்கும் போது அவர்களை நாம் மதிக்கிறோம் என்ற மனப்பாங்கில் அவர்கள் மனமும் குளிர்ந்து விடும், வேற்றுமையும் மறந்து விடும்.

அப்படிப்பட்ட உறவுகளோடு இணைந்து வாழும் போதுதான் உறவுகளின் உன்னதத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நம் மனதிலும் அன்பும், பண்பும், பணிவும், பாசமும், நேசமும் வந்து குடியேறும்.

உறவுகளை உன்னதமாய் மதிக்கின்ற சிறந்த வாழ்வை நாமும் வாழ முடியும் என்று உறுதியோடு முயற்சிப்போம். உறவுகளில் விரிசல் இல்லாத புது வாழ்வு மலர்ந்தால் உலகமும், உறவும் சீர்பெறும். எல்லா பிரச்சினைக்கும் ஒட்டுமொத்தமாய் தீர்வு கிடைத்து விடும்.

Leave A Reply

Your email address will not be published.