நன்நீர் மீன்பிடி மீனவர்களுக்கு வள்ளங்கள் வழங்கி வைப்பு!

நன்நீர் மீன்பிடி மீனவர்களுக்கு வள்ளங்கள் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பினை மேம்படுத்தும் நோக்கில் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மீனவ சங்கங்களிற்கு மீன்பிடி வள்ளங்கள் இன்று(17) குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் ஆர்.5.என் (R5n) செயற்றிட்டத்தின் மூலமாக தென்னியன் குளம், அம்பலப்பெருமாள் குளம், ஐயன் குளம், தேறாங்கண்டல் குளம், கோட்டைகட்டிய குளம் ஆகிய நன்நீர் மீனவ சங்கங்களிடம் 39 வள்ளங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஐயன்கன்குளம் நன்நீர் மீனவ சங்கத்திற்கு 10 வள்ளங்களும், அம்பலப்பெருமாள் குளம் கிராமிய மீனவ அமைப்பிற்கு 05 வள்ளங்களும், கோட்டைகட்டியகுளம் நன்நீர் மீனவ சங்கத்திற்கு 05 வள்ளங்களும், தென்னியன்குளம் கிராமிய அமைப்பிற்கு 10வள்ளங்களும், தேறாங்கண்டல் கிராமிய மீனவ அமைப்பிற்கு 09 வள்ளங்களுமாக 39 வள்ளங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இச் செயற்றிட்டத்தின் ஒரு வள்ளத்தின் பெறுமதி 68,615ரூபா 75 சதம் ஆகும்.

உலக உணவுத் திட்டத்தின் இச் செயற்றிட்டமானது மக்களின் போசணை மட்டத்தை உயர்த்தி, அதனூடாக அம்மக்களின் போசாக்கான உணவினை; பொருளாதாரத்தை அவர்களே மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந் நிகழ்வில் மாவட்ட உலக உணவுத் திட்ட பொறுப்பதிகாரியும் சமுர்த்தி பணிப்பாளர்திருமதிJ.கணேசமூர்த்தி, துணுக்காய் பிரதேச செயலாளர் ஆ.லதுமீரா, உலக உணவுத் திட்ட உத்தியோகத்தர்கள், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின்(NAQDA) உதவிப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், குறித்த கிராம மட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்துகொண்டனர்.

இச் செயற்றிட்டத்தின் மூலமாக முதற்கட்டமாக குறித்த மீனவ சங்கங்களின் குளங்களில் நன்நீர் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் கட்டமாக நன்நீர் மீன்பிடி வள்ளங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.