இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவலாம்! : வைத்தியர் ஹரித அழுத்கே

இலங்கையில் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மிக மோசமான நிலையை அடையலாம் என்று என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் நாட்டு மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்தும் நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை கடந்த நாட்களாக குறைவடைந்துள்ள போதும் தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை.

அதேபோன்று இலங்கையில் கொழும்பு நகர பகுதியில் தொற்று நிலைமை குறைவடைந்திருந்தாலும், வெளிமாவட்டங்களில் தற்போது வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.

இதேவேளை, தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானது.

எனவே, இலங்கையில் பாரிய பாதிப்புக்கள் எவையும் ஏற்படாது என்று கவனயீனமாக இருந்தால் தற்போதுள்ளதை விடவும் மோசமான நிலைமை ஏற்படக்கூடும். இதனால் சுகாதார அதிகாரிகள் இந்த நிலைமை ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்காகத் துரிதமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.