விவசாய ஏற்றுமதி வலயம் நிறுவும் தேசிய செயற்திட்டம் ஆரம்பம்!

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் விவசாய ஏற்றுமதி வலயம் நிறுவும் தேசிய செயற்திட்டம் ஆரம்பம்!

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய விவசாய ஏற்றுமதி வலயம் ஸ்தாபிக்கும் தேசிய செயற்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2021.02.27) கஸபகல ரஜமஹா விகாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் விவசாய கிராமம் அல்லது வலயம் நிறுவும் திட்டத்துக்கு அமைய ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் விவசாய கிராமம்,வலயம் ஆரம்பித்து வைக்கும் வகையில் பிரதமர் மாங்கன்று ஒன்றினை நாட்டிவைத்தார்.

அத்துடன் புதிய மேல் குளத்தில் பிரதமர் அவர்களினால் மீன்குஞ்சுகளும் விடப்பட்டன. பிரதமர் கிராமவாசிகளுக்கு மாங்கன்று, கஜூ மரக்கன்று ஆகியவற்றை பகிர்ந்தளித்தார்.

இச்செயற்திட்டத்துக்கு இணையாக ஏனைய கன்றுகளுக்கு மேலதிகமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு இலட்சம் கஜூ கன்றுகளை நாட்ட இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி விவசாய உற்பத்தி 2 சதவீதமாக காணப்படுகிறது. இவ்வளர்ச்சி வீதத்தை 2025 ஆம் ஆண்டு 4 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. விவசாய முயற்சியாளர்களை ஊக்குவிப்பது இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கமைய ஒன்பது மாகாணங்களிலும் காலநிலை மற்றும் பௌதிக காரணிகளுக்கு அமைய பொருத்தமான ஏற்றுமதியை இலக்காக கொண்டு மரமுந்திரிகை,மிளகு,கறுவா கராம்பு, வெற்றிலை ஆகிய சிறுபயிர் செய்கையினையும்,மா, ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் பயிர்ச்செய்கைகள் பயிரிடப்படும்.

அநுராதபுரம்,குருநாகல் ஆகிய மாவட்டங்களில் பயிர்செய்கை நிலப்பரப்பு மற்றும் விவசாயிகள் ஆகியோரை இனங்காணும் வகையில் பயிர்ச்செய்கை வலயம் அமைக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.2021 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் 10 மாவட்டங்களில் 100 ஏற்றுமதி கிராமம்/வலயம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமிய மக்களை ஒன்றுபடுத்தி தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் இடம்பிடிக்க எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விவசாய ஏற்றுமதி வலயம் அமைக்கும் தேசிய செயற்திட்ட நிகழ்வில் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு அமைச்சரவை சத்தியபிரமாணம் செய்துக் கொண்டது எனக்கு நினைவில் உள்ளது. அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் அமைச்சுக்கான விதானங்களை குறிப்பிடும் போது பலர் சிரித்தார்கள். தயாசிறி ஜயசேகரவை பத்திக் அமைச்சர் என்றும், பிரசன்ன ரணவீரவை மெடி அமைச்சர் என்றும் குறிப்பிட்டார்கள். ஒரு சில அமைச்சர்கள் இப்பெயர்களை கண்டு அமைச்சு பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள கூட சற்று தயங்கினார்கள். நாங்கள் இந்த அமைச்சுக்களை சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட தேசிய உற்பத்திகளை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சாக அடையாளப்படுத்தினோம். சிறு ஏற்றுமதி பயிர்செய்கைகளின் பெறுமதியை உணர்ந்தே அதற்கு தனித்துவமான அமைச்சினை ஒத்துக்கினோம்.

2005 ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனை என்ற செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்பெயரை குறிப்பிட்டு பலர் சிரித்தார்கள் என்பதை நீங்கள் அறவீர்கள். எமது கொள்கை திட்டத்துக்கு அமைய யுத்தத்தை நிறைவு செய்து நாட்டை அபிவிருத்தி செய்து, நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்ற போது சிரித்தவர்களுக்கு பதில் இல்லாமல் போனது. மஹிந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை முன்வைத்துள்ளோம். தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி சர்வதேச சந்தையில் தனித்துவமான போட்டித்தன்மை மிக்க பொருளாதார சூழலை ஏற்படுத்துவது சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் எதிர்பார்ப்பாகும். இதற்கான ஆரம்பக்கட்ட முயற்சியை சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன்னெடுத்தார்.

அவர் ஏற்றுமதி உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிகள் எத்தன்மையானதென்று எனக்கு தெரியும்.
அவர் 1972 ஆம் ஆண்டு ஏற்றுமதி விவசாய திணைக்களத்தை ஸ்தாபித்தார். நாட்டின் வாசனை திரவியங்களை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் அடிதளத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் நெறிப்படுத்தினார்கள். தேசிய உற்பத்திகளை மேம்படுத்த இவர் முன்னெடுத்த முயற்சிகளுக்கு அக்காலக்கட்டத்தில் பல தடைகள் ஏற்பட்டன. 1977ஆம் ஆண்டு இவர் தோற்கடிக்கப்பட்டார்.

பொருளாதாரத்தை தேசிய மட்டத்தில் பலப்படுத்த நினைக்கும் அரசாங்கங்கள் இறந்த காலத்தை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எமது நாட்டின் கறுவா உள்ளிட்ட பொருட்களுக்கு உலகில் பெருமளவில் கேள்வி காணப்படுகிறது. ஒல்லாந்தர்,போர்த்துக்கேயர்கள், மற்றும் ஆங்கிலேயர்கள் இந்நாட்டக்கு தேயிலை, இறப்பர் மற்றும் தேங்காய் ஆகியவற்றை தேடி வரவில்லை. கறுவா, சாதிக்காய்,மிளகு ஆகியவற்றை தேடி வருகை தந்தார்கள். பிற்பட்ட காலத்தில் தேயிலை,இறப்பர் , தென்னை ஆகியவற்றை பொருளாதார பயிர்ச்செய்கைகளாக முன்னெடுத்தார்கள். சுதந்திரம் பெற்ற பின்னர் எமது வாசனை திரவியங்களை பிரதான பொருளாதார பயிர்செய்கையாக கருதாமல் அதனை அழிவு பாதைக்கு கொண்டு சென்றார்கள்.

வெளிநாட்டவர்கள் வழங்கிய தேயிலை, இறப்பர்,தென்னை ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

மரமுந்திரிகை, மா,கொய்யா, புளி ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டமை நினைவில் உள்ளது. தேசிய உற்பத்தியிலான பொருட்கள், உற்பத்திகள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டன.இவ்வாறான செயற்பாட்டினால் செலாவணி நாட்டை விட்டு வெளியேறும். இதனால் நாட்டு மக்கள் சொந்த நாட்டில் வாடகைக்கு வாழ்பவர்களை போல் வாழும் நிலை ஏற்படும்.

நாட்டில் தேசிய உற்பத்திகளை முன்னெடுக்காவிட்டால் தொழில்வாய்ப்புக்கள் தோற்றம் பெறாது. தொழில் வாய்ப்புக்களை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்திற்கு என்னவாயிற்று, அந்திய செலாவணி ஊடாகவே வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்பணம் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறுகிறது. மஞ்சள்தூள் இறக்குமதிக்காக ஒரு வருடத்திற்கு மாத்திரம் 1000ஆயிரம் மில்லியனை செலவழித்துள்ளோம். ஒரு வருடத்திற்கு மஞ்சள் தூள் இறக்குமதி செய்யமால் தேசிய மட்டத்தில் பயிர்ச்செய்கையை ஊக்கப்படுத்த அனுமதி வழங்கினோம். மஞ்சள் தூள் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் மஞ்சள் தூள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று பல எதிர்ப்புக்கள் எழுந்தன. அனைத்தையும் பொறுமையாக எதிர்க் கொண்டோம். தற்போது மஞ்சள் உற்பத்தியில் எதிர்பார்க்கப்பட்டளவு முன்னேற்றம் காணப்படுகிறது. மஞ்சள் இறக்குமதி தடை செய்ததால் 1000 மில்லியன் நிதி சேமிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமல்ல 2019ஆம் ஆண்டு மொத்த விவசாய ஏற்றுமதி ஊடாக 63000 மில்லியன் வருமானம் கிடைக்கப் பெற்றது. இந்த வருமானம் 2020ம் ஆண்டு 73000 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை ஆகிய உற்பத்திகளிலும் முன்னேற்றம் காணப்படுகிறது.

அன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்க வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட வேண்டிய நிலை காணப்பட்டது. முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரும் வரையில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலை இருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொழிற்துறையினால் வருமானம் அனைத்தும் வெளிநாடுகளுக்கே மீண்டும் சென்றது. இந்நிலைமை முழுமையாக மாற்றியமைப்போம். நாம் புதிதாக தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.

இதனால் தான் வாசனை திரவியங்களுக்கு மேலதிகமாக புதிதாக ஏற்றுமதி உற்பத்திகளை அறிமுகம் செய்துள்ளோம். டிஐ.சி மாம்பழம், எமது நாட்டு உற்பத்தியாகும். உலர் வலய பிரதேசத்தில் பயிர்செய்யும் வகையில் இந்த மா இனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

உங்களின் பிரதேசத்தில் டிஐசி ரக மாம்பழ கன்று 1 இலட்சத்தை உள்ளடக்கிய மாம்பழ வலயம் இன்று நிர்மாணிக்கப்படும். உங்களின் வீட்டுத்தோட்டத்துக்கு 25 மா கன்றுகளை வழங்குவதன் ஊடாக குடும்ப பொருளதாரத்தை முன்னேற்றி அதனூடாக தேசிய பொருளதாரத்தை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம். அதுபோலவே 1 இலட்சம் மரமுந்திரிகை கன்றுகளை பயிரிட்டு அதனூடாக மரமுந்திரிகை களஞ்சியசாலையை நிர்மாணிக்கவுள்ளோம். அன்று அமெரிக்க களஞ்சியசாலையை அமைக்க முயற்சித்தார்கள். இதற்கு பதிலாக நாங்கள் மரமுந்திரிகை களஞ்சியசாலையை நிர்மாணிக்கவுள்ளோம்.

இதுவே எமது மாற்றம் நீங்கள் நாட்டும் மா, மரமுந்திரிகை,சோளம் ஆகியவை நாட்டின் இறையான்மையை பாதுகாப்பதற்கான முயற்சியாகும். அனைத்து கன்றுகளும் நாட்டின் சுதந்திரத்தின் அடையாளம். புதிய சிந்தனையுடனான இந்த முயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

பிரதான பெருந்தோட்ட பயிர்ச்செய்கை ஊடாகவும், விவசாய ஏற்றுமதி உற்பத்தி ஊடாகவும் அதிக நிதி கிடைக்கப் பெறுகின்றன. அம்பாந்தோட்டை மாத்திரமல்ல நாடு தழுவிய மட்டத்தில் விவசாய ஏற்றுமதி வலயம் அமைக்கப்படும். கிராமிய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது எமது பிரதான இலக்காகும்.

உங்கள் அனைவருக்கும் கடவுள் துணை,என பிரதமர் குறிப்பிட்டார்.கஸாகல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தலங்பொருவே இந்ர ஸ்ரீ சுமன தேரர்,கிரிவெஹர விகாராதிபதி றுஹூனு மெகம்பத்துவே பிரதான பீடாதிபதி கொபவக தம்மானந்த தேரர்,இத்தாலிய பிரதான பீடாதிபதி வகேகொட ஸ்ரீலானந்த தேரர்,உள்ளிட்ட மத தலைவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, ரமேஷ் பதிரன, இராஜாங்க அமைச்சர்களான சானக வக்கும்பர, டி.வி. சானக, பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கலபத்தி, அஜித் ராஜபக்ஷ,தென் மாகாண ஆளுநர் விலி கமகே, பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் ரவீந்ர ஹேவா விதாரன, மொத்த உற்பத்தி பயிர்ச்செய்கை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹன அபயரத்ன ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.