தடுப்பூசியால் மட்டும் முழு பாதுகாப்பு பெறமுடியும் என்பதற்கு ஆதாரம் இல்லை : சுதத் சமரவீர

கொவிட் தடுப்பூசியால் மாத்திரம் கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை உலகில் முன்வைக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாத அனைவரும் தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தடுப்பூசியால் மாத்திரம் கொவிட்19 வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் உலகில் முன்வைக்கப்படவில்லை.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாத அனைவரும் தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது கட்டாயமாகும்.

கொவிட்19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மது அல்லது புகைபிடிக்கும் பழக்கம் ஒரு தடையாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனமோ அல்லது தடுப்பூசியை தயாரித்த ஆராய்ச்சி நிறுவனங்களோ எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

என்றாலும் அனைத்து மக்களும் புகைபிடித்தல் மற்றும் மது பாவனை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அவை நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றார்.

Leave A Reply

Your email address will not be published.