இலங்கையில் பௌத்த அமைப்புகளை தடைசெய்ய ராஜபக்ச அரசு முயற்சியா? – நாலக தேரர் சந்தேகம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை மூலம் தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்ய ராஜபக்ச அரசு முயற்சிக்கின்றதா? எனத் தேசிய ஒருங்கமைப்பு அமைப்பின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முழுமையற்ற அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கை பௌத்த அமைப்புக்கள் நாட்டில் அடிப்படைவாதத்தைத் தூண்டுகின்றன என்ற தவறான நிலைப்பாட்டை சமூகத்தின் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

குண்டுத் தாக்குதல் சம்பவத்தை திட்டமிட்டது யார்? என்ற உண்மைக் காரணியை ஆணைக்குழு பகிரங்கப்படுத்தவில்லை.

இதனை அறிக்கையின் பிரதான குறைபாடாகக் கருத வேண்டும். நாட்டு மக்கள் எதிர்பார்த்த புதிய விடயங்கள் ஏதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை.

விசாரணை அறிக்கை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பௌத்த அமைப்புக்களை அரசு தடை செய்ய முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டில் பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படைவாதத்துக்கு எதிராக பௌத்த அமைப்புக்கள் செயற்பட்டுள்ளன. இதனைத் தவறு என்று குறிப்பிட முடியாது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் உண்மைத் தன்மையை அரசு பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு எதிராக பௌத்த தேரர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுக்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.