இலங்கையில் இப்போதைக்கு எந்தத் தேர்தலும் நடத்தப்படாது.டலஸ் கருத்து.

இலங்கையில் இப்போதைக்கு
எந்தத் தேர்தலும் நடத்தப்படாது

– அமைச்சர் டலஸ் கருத்து

“இலங்கை இன்னமும் கொரோனா வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், நாட்டில் இப்போதைக்கு எந்தத் தேர்தலையும் நடத்தும் உத்தேசம் அரசுக்கு அறவே இல்லை.”

இவ்வாறு மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதத்தில் நடத்துவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது எனவும், இது தொடர்பான அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச விரைவில் வெளியிடவுள்ளார் எனவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த முடியாது.

தற்போதைய தேர்தல் முறைமையில் பல குழப்பங்கள் உள்ளன. அதனால் புதிய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை எதிர்காலத்தில் நடத்த வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மாறுபட்ட பல கருத்துக்களை ஒருபுறம் அரசியல்வாதிகளும், மறுபுறம் ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்தத் தேர்தல் தொடர்பிலும் ஜனாதிபதி தலைமையிலான அரசுதான் இறுதி முடிவெடுக்கும்.

கடந்த நல்லாட்சி அரசு மாதிரி மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பது புதிய அரசின் நோக்கமல்ல. மக்களின் ஜனநாயக உரிமைக்குப் பாதகம் இல்லாமல் புதிய தேர்தல் முறைமையில் எதிர்காலத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசின் விருப்பம்.

இலங்கை இன்னமும் கொரோனா வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றது. இந்தநிலையில், நாட்டில் இப்போதைக்கு எந்தத் தேர்தலையும் நடத்தும் உத்தேசம் அரசுக்கு அறவே இல்லை. தேர்தல் விரைவில் நடக்கும் என்று பொய்யான வாக்குறுதியை வழங்கி மக்களை ஏமாற்ற அரசு விரும்பவில்லை” – என்றார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஜுன் மாதம் நடத்தப்படும் என்ற செய்தி வெறும் ஊடகச் செய்தியே. அது அரசின் செய்தி அல்ல. மாகாண சபைத் தேர்தலை ஜுனில் நடத்துவது தொடர்பில் அரசு தீர்மானம் எதையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.