ஜெனிவா பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும்! சம்பந்தன் கோரிக்கை.

ஜெனிவா பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும்! – சம்பந்தன் கோரிக்கை

“இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடனான தீர்வு விடயத்தில் இந்தியா மேலும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிவாவில் இந்த முறை முன்வைக்கப்படும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

‘நல்லிணக்க செயன்முறை மற்றும் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகத் தமிழர்களின் வேணவாக்களுக்குத் தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கையைக் கோருகின்றோம். இலங்கை ஒருமைப்பாடு பேணப்பட வேண்டிய அதே நேரத்தில், இலங்கைத் தமிழர்களின் கௌரவம், சம உரிமை என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு’ என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாட்டை மனதார வரவேற்கின்றோம்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும், ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் நீதி, சமாதானம், சமத்துவம், கெளரவம் எனச் சகல உரிமைகளுடன் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும் இந்தியாவின் நிலைப்பாடு.

இதை இலங்கை அரசுடனான பேச்சின்போது மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. தற்போது சர்வதேச அரங்கிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.