குழந்த‍ையை துன்புறுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை?

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான தாயார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 300, 308 மற்றும் 308 ஏ ஆகியவற்றின் கீழ் கொலை முயற்சி மற்றும் சிறுவர் கொடுமை போன்றவற்றின் அடிப்படையில் சந்தேக நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் குழந்தையின் தாயாரான சந்தேக நபர், நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரின் விரைவான நடவடிக்கையின் கீழ் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

சந்தேக நபரின் கணவர் அரபு நாடு ஒன்றில் தொழில் செய்து வரும் நிலையில் அவர் குழந்தையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அதனாலேயே இதனை வெளிக்கொண்டு வருவதற்காக பெண்ணின் சகோதரனே காணொளிப் பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.