இரணைதீவில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யும் தீர்மானத்தை உடன் வாபஸ்பெற வேண்டும் அரசு.

இரணைதீவில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யும் தீர்மானத்தை உடன் வாபஸ்பெற வேண்டும் அரசு.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை வலியுறுத்து

“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்தை அரசு உடனே திரும்பப் பெறவேண்டும்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமடைந்து பரவி வருகின்றது. இதனிடையே கொரோனா வைரஸ் நோயால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை எங்கே அடக்கம் செய்வதென்பதில் மேலும் குழப்பமான இன, மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதைக் கண்டிக்க வேண்டும்.

முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கம் செய்யும் பிரச்சினை தீர்ந்து விட்டது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அறிக்கையிலிருந்து இந்தப் பிரச்சினையை நீக்கிவிடுமாறு அரசு ஜெனிவா அமர்வில் கோருகின்றது.

இந்தக் கோரிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில், முஸ்லிம் நாடுகளின் வாக்குகளைக் கவருவதற்காகும். இந்த முயற்சி, முஸ்லிம் மக்களையும் நாடுகளையும் ஏமாற்றும் முயற்சியாகும்.

கொரோனாவால் உயிரிழந்த ஜனாஸாக்களை கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசத்திலுள்ள இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான அரசின் தீர்மானத்தை அங்குள்ள மக்களும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இஸ்லாமிய மதத் தலைவர்களும்கூட எதிர்த்துப் போராடுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ நிபுணர் குழுவும் இரணைதீவைக் குறித்துச் சொன்னதாக இல்லை. அக்குழுவின் சிபார்சுகளில் முஸ்லிம் மக்களின் இறப்பு கொரோனாவில் இடம்பெற்றால் ஜனாஸாக்களை அந்தந்த இடங்களில் அடக்கம் செய்யலாம் என்றே அறிவித்துள்ளது.

அவ்வாறிருக்க அரசு ஏன் இந்தத் தவறான முடிவை எடுத்தது? இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு யாரின் சிபார்சு பெறப்பட்டது?

எனவே, அரசு இரணைதீவில் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய எடுத்த தீர்மானத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். பதிலாக அரசு இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் கலந்தாலோசித்துப் பொருத்தமான இடங்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை இஸ்லாமிய மத ஆராதனையுடன் நல்லடக்கம் செய்யும் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.