யாழில் ஆசிரியை உட்பட வடக்கில் மேலும் 20 பேருக்குக் கொரோனா!

யாழில் ஆசிரியை உட்பட வடக்கில் மேலும் 20 பேருக்குக் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 12 பேர் மன்னாரிலும், 8 பேர் யாழ்ப்பாணத்திலும் கண்டறியப்பட்டனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 304 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 20 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நவாலியைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர் நவாலியில் கடந்த வாரம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆசிரியையுடன் பஸ்ஸில் முல்லைத்தீவுக்குச் சென்று திரும்பியவர்.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மெலிஞ்சிமுனையில் 6 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்குபற்றியவர்கள்.

இதேவேளை, மன்னார் நகரிலுள்ள கொமர்ஷல் கிரடிட் நிதி நிறுவனத்தில் 5 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரி சபையில் பணியாற்றும் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கொரோனாத் தொற்று அறிகுறிகளுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள்.

மன்னார் மாந்தை மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதேவேளை, மன்னார் நகரிலுள்ள சிகையலங்கரிப்பு நிலைய தொற்றாளர்களுடன் தொடர்புடைய இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மன்னார் பொாலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.