மஹிந்தவுடன் இணைந்து மைத்திரி நல்லிணக்கத்தை சீர்குலைத்தார் : மங்கள சமரவீர

யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட தவறுகளுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கொள்கை ரீதியில் இணக்கம் வெளியிட்டு, “உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவராக மாறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொட்டுக் கட்சியுடன் இணைந்து, நல்லிணக்க பொறிமுறையை சீர்குலைத்துள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிக் கட்டமைப்பை நிறுவுவது உள்ளிட்ட மனித உரிமை முயற்சிகள் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த விடயத்தை நிராகரித்துள்ள மங்கள சமரவீர, வெளிநாட்டு நீதிமன்றத்தில் யுத்தக் குற்றங்கள் குறித்த விசாரணை செய்யப்படுவதை தடுப்பதில் தனது தலையீடு காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“அந்த தீர்மானத்தின் நிறைவில் நான் ஜனாதிபதியுடன் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் கலந்துகொண்டேன். அன்று இரவு, குறித்த தீர்மானம் தொடர்பில் கொழும்பிலிருந்து பிரதமர் அனுப்பிய ஒவ்வொரு வார்த்தையையும் என்னுடைய அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதியிடம் காண்பித்து ஒப்புதலைப் பெற்றேன்.”

அமைதிக்கான நோபல் பரிசுக்கு கூட பரிந்துரைக்கப்படவிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நல்லிணக்க செயன்முறைக்கு எதிராக செயற்பட்டு ”ராஜபக்சக்களால் விழுங்கப்பட்டுள்ளதாக” முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவான கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல் சந்தர்ப்பத்திலேயே, ஜெனீவா தீர்மானத்தை செயற்படுத்தப்போவது இல்லையென தெரிவித்தார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னைய அரசாங்கம் பல வழிமுறைகளை உருவாக்கியிருந்ததோடு, போர்க்குற்றங்களை விசாரணை செய்ய உள்ளூர் பொறிமுறையை நிறுவுவதற்கு முன்னதாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகத்தின் எதிர்காலம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

”கோட்டாபய ராஜபக்சவின் எண்ணத்தில் இன்றாவது மாற்றம் ஏற்பட்டு, குறித்த அலுவலகத்தை அவ்வாறே நடத்திச் செல்ல அனுமதிப்பார் என நாம் நினைத்தோம். எனினும் அதனை நடத்திச் செல்வதற்கான நிதி உள்ளிட்ட வசதிகள் மற்றும் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக் கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதை நாம் அறிந்துகொண்டோம்.” என மங்கள தெரிவித்துள்ளார்.

போரின் போது குற்றமிழைத்த படையினருக்கு கட்டளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை இராணுவத் தளபதியாக நியமிக்க தீர்மானித்த ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவை எதிர்ப்பதாக தெரிவித்துள்ள மங்கள சமரவீர, ”கொள்கை ரீதியில் இது பாரிய தவறு” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்ப்பிற்கு மத்தியில் இராணுவத் தளபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கடந்த பெப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையுடனான நல்லிணக்க செயன்முறை வடக்கிற்கு மாத்திரமன்றி தெற்கிற்கும் பயனளிக்கும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்த செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.