கொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில் சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு – 13 பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் சுகாதார பரிந்துரைகளைப் பெற்றுக்கொடுக்குமாறு முன்னணி ஆசிரியர் சங்கம் கல்வி அதிகாரிகளிடம் கேட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லினின் கையொப்பத்துடன் ஜூலை 3 திகதியிடப்பட்டு, மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 13, ஜிந்துபிட்டி பிரதேசத்தில், கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், பிரதேசத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவரே நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நபரின் உறவினர்கள் உட்பட பிரதேசத்தைச் சேர்ந்த 29 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனையை அண்மித்து அமைந்துள்ள பாடசாலைகளில் இப்பகுதியில் வசிக்கும் பல சிறுவர்கள் கல்வி கற்பதை நினைவு கூர்ந்துள்ள ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டார்லின், பாடசாலைகளின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஜூலை 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள விடயத்தையும், மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு நினைவூட்டியுள்ளார்.

“விவேகானந்தா தேசிய பாடசாலை, புதித அன்னம்மாள் கல்லலூரி, புதின அந்தோனியார் சிங்கள கல்லூரி, புனித அந்தோனியார் சிறுவர் பாடசாலை, வுல்பெண்டல் மகளிர் கல்லூரி, ஹமீத் அல்-ஹுசைனியா தேசிய பாடசாலை, கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி, மத்திய கொழும்பு இந்து கல்லூரி, கொட்டாஞ்சேனை சிங்கள ஆரம்ப பாடசாலை, பதிர்தீன் மொஹமட் மகளிர் கல்லூரி ஆகியன ஜிந்துபிட்டி பிரதேசத்தை அண்மித்து காணப்படுகின்றன”

இந்தப் பின்னணியில், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளைத் மீளத் திறப்பதற்கு முன்னர், சுகாதாரத் துறையிடம் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளது.

கொழும்பு 13 – ஜிந்துபிட்டி பகுதியில் இருந்து கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளதாக, அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவாவின் கையொப்பத்துடன் ஜூலை 3ஆம் திகதியான நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கை ஊடாக உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.