சுவிஸில் புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்கு தடை !

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா மற்றும் நிகாப்  ஆகியவற்றின் மூலம் வீதிகள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் முகங்களை  மறைப்பதை தடை விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ஆதரவாக 51.21% சுவிஸ் வாக்காளர்கள் வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளனர்.

இதனால், பொது இடங்களில்,  இனி பெண்கள் புர்கா மற்றும் நிகாப் அணிய அனுமதி இல்லை.

பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா ஆகிய ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா மற்றும் நிகாப் ஆகியவை ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், வழிபாட்டுத் தலங்களிலும், மத விழாக்கள் போன்ற “பூர்வீக பழக்கவழக்கங்களிலும்” முழு முகம் மறைத்தலுக்கு  அனுமதிக்கப்படுகிறது.

உடல்நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அணியும் முகமூடிகள் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக அணியும் முகமூடிகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது.

சுவிஸ் நாடாளுமன்றமும் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவும் இவ்வாக்கெடுப்பை எதிர்த்தது. அதற்கு பதிலாக, சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த அதிகாரிகள் கேட்கும் போது அவர்கள் முகத்தை மறைத்துள்ள முக்காடுகளை திறந்து அடையாளப்படுத்த உதவலாம் என பரிந்துரைத்தனர்.

முஸ்லிம் குழுக்கள் தடையை விமர்சித்துள்ளன. “இது தெளிவாக சுவிட்சர்லாந்தில் உள்ள முஸ்லிம் சமூகம் மீதான தாக்குதல். முஸ்லிம்களை மேலும் இழிவுபடுத்துவதும், ஓரங்கட்டுவதும் இதன் நோக்கம் ”என்று முஸ்லீம் பெண்ணியக் குழுவான லெஸ் புல்லார்ட்ஸ் வயலட்டின் உறுப்பினர் இன்னெஸ் அல்-ஷேக் தெரிவித்தார்.

சுவிஸ் அரசாங்க வலைத்தளம் , “புர்கா அல்லது நிகாப் போன்ற மத முக்காடுகள் , பெண்களுக்கு எதிரான வன்முறையின் அடையாளமாகும், அவை நம் சமூகத்துக்கு பொருத்தமானவை அல்ல.” என இந்தத் தடை குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது.

டிசினோ மற்றும் செங்காலன் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே முக்காடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்  மூன்று மாநிலங்கள் அத்தகைய திட்டங்களை நிராகரித்தன. சுவிட்சர்லாந்தின் 26 மாநிலங்களில் 15 மாநிலங்கள் ஏற்கனவே எதிர்ப்புகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் முக்காடுகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் 8.6 மில்லியன் மக்களில் சுமார் 5% அல்லது 390,000 பேர் முஸ்லிம்களாகும். அவர்களில் பெரும்பாலோர் துருக்கி, போஸ்னியா மற்றும் கொசோவோ நாட்டு வழி வந்தோராக இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.