சுவீடன் துப்பாக்கிச்சூடு: 16 வயது இளைஞர் கைது.

சுவீடனின் உப்சாலா நகரில் உள்ள சிகை அலங்காரக் கடையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் மூன்று பேர் மாண்டனர். இதுதொடர்பாக 16 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை அவர் நடத்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச்சூடு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) பிற்பகல் நிகழ்ந்தது.
“தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று விசாரணை நடத்துகின்றனர். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளிடம் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. மேலும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள கைப்பேசிகள், இதர பொருள்கள் ஆராயப்படுகின்றன,” என்று சுவீடனின் காவல்துறை தெரிவித்தது.
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் குண்டர் கும்பல்களுடன் தொடர்புடையதா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்று அது கூறியது.
ஆனால் அதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுவீடனில் கடந்த பத்தாண்டுகளில் குண்டர் கும்பல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வயது குறைந்தவர் என்பதால் அவர் தொடர்பான விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் அதிகம் வெளியிடவில்லை.