சருமம் ஜொலிஜொலிக்க வீட்டிலேயே எப்படி ஃபேஷியல் செய்யலாம்?

மழைகாலமும் குளிர்காலமும் தொடங்கிவிட்டாலே நம்முடைய சருமத்துக்கு நாம் கூடுதல் பராமரிப்பையும் கவனத்தையும் செலுத்த வேண்டியிருக்கும்..

ஏனெனில் குளிர்ந்த காற்று சருமத்தைத் தீண்டுகின்ற பொழுது, நம்முடைய சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகும். அதிலும் ஏற்கனவே வறண்ட சருமம் இருக்கிறவர்களுக்கு அது இன்னும் கூடுதலாக வறட்சியை ஏற்படுத்தும். சரும வெடிப்புகளை உண்டாக்கும். இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு நாம் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து, பார்லருக்குப் போக வேண்டும் என்ற அவசியமெல்லாம் கிடையாது. நம்முடைய வீட்டிலுள்ள சில பொருள்களை வைத்தே, நம்முடைய சரும வறட்சியைப் போக்கிக் கொள்ள முடியும். அதற்கு என்னென்ன பொருள்கள் தேவை. அவற்றின் பண்புகள் என்ன, அவற்றை வைத்து சருமத்தை எப்படி பொலிவாக்கிக் கொள்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

பால், காபி, பவுடர், கற்றாழை, ஜெல், தயிர், ​பால்

பாலில் உள்ள வைட்டமின் டி நம்முடைய சருமத்தில் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி விடுகிறது. அதனால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்கும். சருமத்தை அதிக நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதோடு பாலில் அதிக அளவில் புரதச்சத்து இருப்பதால், இது சருமத்தை சேதமடையாமல், செரும வெடிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும். சருமத்திசுக்களைப் பாதுகாக்கும். சருமம் வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளும்.

காபியில் உள்ள காபிஃனைன் சருமத்தைப் பொலிவாக்க உதவுகிறது. காபி சருமத்தில் ஏற்படும் தளர்வை நீக்கி உறுதியாகவும் மென்மையாகவும் மாற்றும் தன்மை கொண்டது. இப்படி முகத்தசைகளை இறுக்கி, தளர்வைப் போக்குகிற பொழுது, சோர்வான கண்களும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கூட பொலிவு பெறும்.

தயிர் சருமச் சுருக்கங்களைப் போக்கும் ஆற்றல் கொண்டது. முகத்தில் வயதான தோற்றம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு தயிரை பேஸாகக் கொண்டு, பேஸ்பேக் போடலாம்.அதிலுள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத் துளைகளை சீர்செய்யும்.

கற்றாழை நம்மடைய சருமத்துக்கான கொடை என்று கூட சொல்லலாம். அது சருமத்தின் நிறத்தைக் கூட்டும். புறஊதாக் கதிர்களால் ஏற்படும் தாக்கத்தைச் சீர்செய்யும். சருமச் சேதம் ஏற்பமடாமல் பார்த்துக் கொள்ளும். சருமத்தின் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்யும். சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைச் சரிசெய்து, சருமத்தை மென்மையாக்கும் சிறந்த மாய்ச்சரைஸராக கற்றாழை செயல்படுகிறது.

பாலை வைத்து முதலில் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும்.

ஒரு காட்டன் pad எடுத்துக் கொண்டு அதை பாலில் நன்கு முக்கி எடுத்து, முகத்தில் அப்ளை செய்து சில நிமிடங்கள் அது உலரும் வரை அப்படியே விட்டுவிட வேண்டும்.. அந்த பால் உலர்ந்த பின், முகத்தை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுங்கள்.

ஒரு பௌலை எடுத்துக் கொண்டு அதில் சிறிது காபி பவுடரையும் சிறிது தயிரையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு எல்லா இடங்களிலும் அப்ளை செய்து கொண்டு அப்படியே 10 நிமிடம் உஉலர விட்டு, பின் சருமத்தைக் கைகளால் நன்கு மசாஜ் செய்து விடுங்கள். அதன்பின் சாதாரணமாக நீரில் முகம் கழுவுவது போல் கழுவிவிட வேண்டும்.

ஒரு துண்டு கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். ஃபிரஷ் கற்றாழை இல்லாவிடில் கடைகளில் கிடைக்கும் ஜெல்லைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதை முகத்தில் தடவி நன்கு கீழிருந்து மேலாக மசாஜ் செய்யுங்கள். பின்பு 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடுங்கள். இருபது நிமிடங்கள் கழித்து நன்கு நீரால் கழுவுங்கள்.

இப்போது கண்ணாடி முன் நின்று முகத்தைப் பாருங்கள். உங்களாலேயே நம்ப முடியாது. உங்கள் முகம் ஜொலிப்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள். வாரத்துக்கு இரண்டு முறையாவது இதைத் தொடர்ந்து செய்து வந்தால், மிக விரைவாகவே நல்ல பலனை அடைய முடியும்.

Leave A Reply

Your email address will not be published.