ராகலை தோட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை!

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் 2ம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின.

இந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 26 பேரும், பெண்கள் 32 பேரும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 3 பேரும் அடங்குகின்றனர். இதனால் 61 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் முதலாம் இலக்க நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.

இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட ஆலயத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.