ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இதுவரை 20 நாடுகள் வாக்களிக்க இணக்கம்!

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையின் இறுதி வடிவம் பெரும்பாலும் தீர்மானிக்கப்பட்டு வரையறை செய்யப்பட்ட நிலையில் 20 நாடுகள் வரையில் அதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இணங்கியிருக்கின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசுக்கு ஆதரவாகத் திடமாக நிற்போம், பிரேரணையை எதிர்த்து வாக்களிப்போம் என 8 அல்லது 9 நாடுகள் மட்டுமே உறுதியளித்திருக்கின்றன என்றும் கூறப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 47 நாடுகளில் 20 நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு எதிரான பிரேரணை மீது திரட்டியுள்ள பிரிட்டன், ஜேர்மனி, கனடா, மென்ரிநீக்காரோ, மஸிடோனியா ஆகிய அனுசரணை நாடுகள், குறைந்தது இன்னும் 4 நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்துவதில் தீவிரமாக இருக்கின்றன என்றும் கூறப்பட்டது.

அங்கத்துவ நாடுகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவற்றின் (24 நாடுகள்) ஆதரவுடன் வாக்கெடுப்புக்குச் செல்வதே தங்களுக்குப் பலமானது – வலுவானது என இந்தப் பிரேரணையின் அனுசரணை நாடுகள் கருதுகின்றன.

பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு இன்னும் எட்டு நாள்கள் இருப்பதால் அந்த நான்கு நாடுகளின் ஆதரவைக்கூட எட்டிவிடலாம் என அனுசரணை நாடுகள் தரப்பில் கூறப்படுகின்றது.

தமக்கு 10 நாடுகளின் ஆதரவு இருக்கின்றது என இலங்கை கூறினாலும் அது வாக்கெடுப்பு சமயத்தில் எட்டு அல்லது ஒன்பதாகக் குறைந்து விடும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வாக்கெடுப்பில் பல நாடுகள் பங்கெடுக்காமல் நடுநிலைமை வகிக்கக்கூடும் என்பதால் இப்போது தமக்குக் கிடைத்துள்ள 20 நாடுகளின் ஆதரவுடனேயே பிரேரணையை தீர்மானமாக – வெற்றிகரமாக அனுசரணை நாடுகள் நிறைவேற்றிக் கொள்ளும் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையில் இந்தப் பிரேரணையை எதிர்த்து வாக்களித்து, தங்களுக்கு ஆதரவு நல்கும்படி அங்கத்துவ நாடுகளின் தலைவர்களை இலங்கை நேரடியாகத் தொடர்பு கொண்டு கோரி வருகின்றது.

இந்தவகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று தொலைபேசி மூலம் ஆதரவு கோரினார். வேறும் சில நாட்டுத் தலைவர்களுடனும் அவர் பேசினார் என்று கூறப்பட்டது.

ஏனைய நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தொடர்பு கொண்டு ஆதரவு கோரி வருகின்றார் எனவும் கூறப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.