ஆப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தன.

இதைத் தொடர்ந்து இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி அபுதாபியில் உள்ள சேக் சாயீத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குர்பாஸ் மற்றும் கரீம் ஜனத் ஆப்கானிஸ்தானுக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். கரீம் ஜனத் 26 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து, கேப்டன் அஸ்கர் ஆப்கானுடன், குர்பாஸ் ஜோடி சேர்ந்தார்.

குர்பாஸ் 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ஆப்கான் 38 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தினாஷே கமுன்ஹுகாம்வே அரை சதத்தை நெருங்கிய நிலையில், 44 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்தவர்களில் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது.

இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.