ஆட்சேர்ப்பு விதிகள் மீறப்பட்டதால் பரீட்சாத்திகள் பாதிப்பு; மாகாண கல்வி அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை அவசியம்.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட நேர்முக பரீட்சையில் ஆட்சேர்ப்பு விதிமுறைகளை மீறி செயற்பட்டதன் மூலம் சில விண்ணப்பதாரிகள் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த நேர்முக பரீட்சை சபை தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் ஆகியோரிடம் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

ஆங்கில ஆசிரியர் ஆட்சேர்ப்புக்காக தேசிய உயர் கல்வி ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையின்போது மாகாணக் கல்வி அமைச்சில் உதவிச் செயலாளராக இணைப்புச் செய்யப்பட்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர் ஒருவர் இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் மாகாண பொதுச் சேவை
ஆணைக்குழு ஆகியவற்றின் ஆட்சேர்ப்பு விதிமுறைகளை மீறும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.

விண்ணப்பதாரிகளால் தயார்படுத்தப்பட்ட தலைப்பொன்றில் மாதிரி கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சேர்ப்பு திட்டம், ஆசிரியர் சேவை பிரமாண குறிப்பு என்பவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட அதிகாரி அதற்கு முரணாக தான் கூறும் தலைப்பில் மாதிரி கற்பித்தலை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக சுமார் 20 பேர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்படவுமில்லை. இவர்களில் சிலர் இது தொடர்பாக கல்முனை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு விதிகளை மீறி நடந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வதிகாரியின் இச்செயற்பாடானது இலங்கை அரச தாபன விதிக்கோவையின் பிரகாரம் அரச ஊழியர்களால் புரியப்படும் பாரிய குற்றச்செயல் சம்பந்தமான முதலாவது அட்டவணைக்கமைய கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த உத்தியோகத்தரது முறைகேடான செயற்பாடு காரணமாக அரசுக்கு பெரும் பணச்செலவு ஏற்பட்டுள்ளதுடன் நேர்முக பரீட்சைக்கு தோற்றிய அப்பாவி விண்ணப்பதாரிகளும் கடும் மனஉளைச்சலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனவே இவ்வதிகாரிக்கெதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்பட்ட செலவுகளையும் அவரிடமிருந்து அறவிட வேண்டும்- என அக்கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

Leave A Reply

Your email address will not be published.